முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் பற்றிய செய்திகள் சமீபகாலமாக தொடர்ந்தாற் போல வந்து கொண்டிருக்கின்றன.
கைரி ஒரு தீவிர அம்னோ கட்சியின் விசுவாசி. இப்படி அப்படி தன் இஷ்டப்படி கட்சி மாறும் ஓர் அரசியல்வாதியாக நாம் அவரைப் பார்க்க முடியாது. ஒரு நியாயமான அரசியல்வாதி எனச் சொல்லலாம்.
சென்ற 15-வது பொதுத் தேர்தலில் வழக்கமாக அவர் நிற்கும் தொகுதியில் அவர் போட்டியிட்டிருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார். அவர் வெற்றி பெறக் கூடாது என்பது தான் அம்னோவில் தலைமைத்துவம் விரும்பியது. அதனால் தான் இங்கு அங்கு என்று அவரை அலைக்கழித்து கடைசியில் சுங்கை பூலோவில் வேண்டா வெறுப்பாக அவருக்கு இடத்தை ஒதுக்கியது.
மக்கள் ஏன் கைரியை விரும்புகிறார்கள்? பொதுவாக மக்கள் படித்தவர்களை விரும்புகிறார்கள் என்பது தான் உண்மை. கைரி இங்கிலாந்தில் படித்தவர். நன்றாக ஆங்கிலம் அவருக்கு வரும். இப்போது அம்னோவில் உள்ளவர்கள் படிக்காதவர்களா என்கிற கேள்வி எழத்தான் செய்யும். அவர்களில் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் பேச வராது! இந்தியர், சீனர்களைப் பொறுத்தவரைப் பொதுவாக ஆங்கிலம் பேசுபவர்களையே நாம் விரும்புகிறோம்.
இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இந்த மொழிகள் ஏதோ ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு மொழி குறுகிய மனப்பான்மையுடையோர் என்கிற அடையாளத்தைக் கொண்டு வருகிறது. இன்னொன்று தாராள மயத்தைக் கொண்டு வருகிறது. ஆமாம், இவைகளெல்லாம் நமது கற்பனையாகக் கூட இருக்கலாம்!
இன்றைய நிலையில் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினுடைய பெரிகாத்தான் நேஷனல் கைரியை தன் வசம் இழுக்கப் பார்க்கிறது. ஆகக் கடைசி தூண்டிலாக "உங்களை மந்திரி பெசாராக ஆக்குவோம்" என்று சிகப்பு காரட்டை முகத்தின் முன் ஆட்டிக் கொண்டிருக்கிறது!
கைரி இதற்கெல்லாம் மயங்குகிற மனிதர்தானா? அம்னோ தலைமைத்துவம் கைரியை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டது. ஆனாலும் தனக்கான இடம் அம்னோவில் இன்னும் இருக்கிறது என்று கைரி நம்புகிறார். தன்னைப் போன்ற இளைஞர்களின் தேவை இன்னும் அம்னோவுக்குத் தேவை என்பது தான் அவரது கணிப்பு.
நான் சொல்ல வருவது இது தான்:கைரி கட்சி மாறமாட்டார்!
No comments:
Post a Comment