Friday 5 May 2023

இது நல்லதொரு தொடக்கம்!

 

                                   டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் விளக்குகிறார்

மித்ரா, இந்திய சமூக உருமாற்றத்திட்டப்பிரிவு, தனது பணிகளை இன்று ஆரம்பித்தது.

ஏற்கனவே இல்லையோ என்று கேட்டால் அதை விட்டுவிடுவோம்! அதனை  நோண்டினால் கண்ட கசடைகளின் மீது கழிவுகளைக்  கொட்ட வேண்டி வரும்.

இன்று புதிதாய் பிறந்தோம் என்பது போல இன்றிலிருந்து மித்ராவை  புதிய கண்ணோட்டத்தோடு பார்ப்போம்.

இன்று செய்தியாளர் கூட்டத்தில் மித்ராவின் சிறப்புக்குழுவின் தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் முக்கியமான மூன்று  திட்டங்களை  அறிவித்திருக்கிறார்.  அனைத்தும் பி40 மக்களுக்கானது.

இடைநிலைப்பள்ளிகளில் இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2000 ரிங்கிட் உதவித் தொகை.  இரண்டு:  தமிழ் பாலர் பள்ளிகளுக்கான நிதியுதவியாக 200 ரிங்கிட் மூன்று; டைலிசீஸ்  சிகிச்சை பெறுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் உதவிதொகையாக 200 ரிங்கிட் மாதத்திற்கு நான்கு முறை கொடுக்கப்படும். 

இதன் முழு விபரங்களும் மித்ரா வெளியிடும்.  கல்விக்கான தொகை போதுமா என்பது நமக்குத் தெரியவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஒரு முடிவுக்கு வரமுடியாது. இடைநிலைக்கல்வி, பாலர்பள்ளிகளுக்கு உதவுவது உயர்ந்த நோக்கம் உடையது. அதே போல உயர்கல்வி நிலையங்களில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு -  கடன் உதவி கிடைக்காத மாணவர்களுக்கு  -  உதவுவது மிகவும் தேவையானது. எஸ்.பி.எம். முடித்த மாணவர்களில் கலவியைத் தொடர முடியாத மாணவர்கள் கைத்திறன் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் தவிர்க்க முடியாதது.

எப்படியோ மித்ரா சரியாகவே அடி எடுத்து வைத்திருக்கிறது.

இந்த நேரத்தில் முக்கியமான ஒன்றையும் நாம் மித்ராவின் கவனத்திற்குக் கொண்டு வரத்தான் வேண்டும். ஆரம்பகாலத்தில் இப்படி ஒர் அமைப்பை ஏற்படுத்தியதற்கான காரணமே இந்தியர்கள் வியாபாரத்துறையில் ஊக்குவிக்க வேண்டும் என்பது தான். இப்போதும் அதுவே மித்ராவின் பிரதான இலட்சியமாக இருக்க வேண்டும். 

கடந்த காலங்களில் வியாபாரிகள் பயன் பெற்றிருக்கிறார்கள் என்றால்  அவர்கள் பெரும்பாலும் பெரும் வியாபாரிகள். நாம் அவர்களுக்கு எதிரிகள் அல்ல. சிறு, குறு வியாபாரிகளுக்கான உதவிகள் பெருக வேண்டும் என்பதே நமது விருப்பம். வியாபாரிகளுக்கென குறைந்தபட்சம் ஐந்து கோடி வெள்ளியாவது  ஒதுக்க வேண்டும். சிறு, குறு வியாபாரிகள் அதிகம் பயன்பெற வேண்டும். 

கடன் பெறுவதற்கான வழிமுறைகள் வியாபாரிகளுக்கு விளக்கப்பட வேண்டும்.  திடீரென்று நேற்று முளைத்த காளான்களுகெல்லாம்  உதவிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. எத்தனை ஆண்டுகள் வியாபாரத் துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள், கணக்குவழக்குகள் எப்படி இருத்தல் வேண்டும்  போன்றவை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

கடன் கேட்கும் இடங்களில் மலாய்க்காரர்களைப் போட்டால் எதுவும் நடக்காது என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும். ஒருவர் தோல்வியுற்றால் அவருடைய தவறுகளை விளக்கி  மீண்டும் அடுத்த ஆண்டு எப்படி மனு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.   வழிகாட்டாமல் 'தகுதி இல்லை' என்று ஒரே வார்த்தையில்  அவர்களைப் புறக்கணிக்க வேண்டாம். இது நமது ஆலோசனை. அவ்வளவு தான்.

இது ஒரு நல்ல தொடக்கம்.  மித்ரா தொடர்ந்து பீடு நடை போட வேண்டும். சமுதாயத்திற்கு, தலைவர்களுக்கு அல்ல, நல்ல சேவைகளைக்  கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment