இப்போதெல்லாம் மேலே சொல்லப்பட்ட வார்த்தைகளை அடிக்கடி கேட்கிறோம்!
எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமானால் "நீங்கள் மலாய்க்காரராக இருக்க வேண்டும்!" என்று இப்படி ஒரு பதிலை ஓர் இந்தியப் பெண்ணுக்குச் சொன்னார் அந்த நிறுவனத்தின் வரவேற்பாளராக இருந்த ஒரு மலாய்ப் பெண். இத்தனைக்கும் அந்த நிறுவனமோ ஓரு மலாய்க்காரர் நிறுவனம் அல்ல! இத்தனைக்கும் அந்த மலாய்ப் பெண்ணோபெரிய பதவி ஏதும் வகிக்கவில்லை. ஆனாலும் அவருக்கு அப்படிப் பேசுவதற்கு துணிச்சலைக் கொடுத்தது யார் என்றும் புரியவில்லை.
பொதுவாக இப்போதெல்லாம் பல இடங்களில் இந்திய இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதில் பல பிரச்சனைகள் எழுகின்றன. நிறுவனங்களின் கொள்கை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் இடையே உள்ள சிலர் எந்த ஒரு காரணமும் இல்லாமல் வாசலைக்கூட மிதிக்க விடாமல் அவர்களைத் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
பொதுவாக பேசப்படுவது என்னவென்றால் இந்தியர்களுக்கு எந்த ஒரு நிறுவனமும் வேலை கொடுப்பதில்லை என்பது தான். உண்மையோ பொய்யோ அது நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்த நேரத்தில் நாம் ஒருசில ஆலோசனைகளைக் கூறலாம். ஏற்க முடிந்தது தான். எல்லா நிறுவனங்களிலும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு எடுப்பதை நிறவனங்கள் விரும்புவதில்லை. எது எப்படியிருப்பினும் குறிப்பிட்ட விழுக்காடு இந்தியர்களின் எண்ணிக்கை நிறுவனங்களில் இருக்க வேண்டும் என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். சில இடங்களில் ஆறு விழுக்காடு, ஏழு விழுக்காடு அல்லது எட்டு விழுக்காடு கூட இருக்கலாம். விழுக்காட்டிற்கு ஏற்ப வேலைகள் தரப்பட வேண்டும்.
இதற்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால் இன்று இந்தியர்களின் நிலைமை தான் மோசமாக இருக்கின்றது. மலாய்க்காரர்களுக்கு எப்படியோ வேலைகள் கிடைத்து விடுகின்றன. இந்தியர்களின் நிலைமை தான் பரிதாபம். ஆனால் வெறும் பரிதாபம் மட்டும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டு விடாது. நடவடிக்கைகள் வேண்டும்.
இந்தியர்களுக்கு வேலை கிடையாது என்று சொல்லுவதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கிடையாது என்றால் என்ன அர்த்தம்? வேலை இல்லையென்றால் சிறு தொழில்கள் செய்ய அவர்களுக்கு அனுமதி கொடுங்கள். அங்கும் ஒரு பக்கம் கதவடைப்பு. இப்படி எங்குப் பார்த்தாலும் கதவடைத்தால் அப்புறம் இந்தியர்களின் நிலைமை என்னாவது?
ஒருசில விஷயங்களில் நமது தலைவர்கள் நமது உரிமைகளைப்பெற வாய்திறந்து பேச வேண்டும். ம.இ.கா. வினரைப் போல பட்டும் படாமலும் போய்க் கொண்டிருந்தால் இந்த ஒற்றுமை அரசாங்கத்திலும் நாம் எந்தவித பயனையும் அனுபவிக்க முடியாது.
எல்லா மலேசியர்களும் வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும். அதில் இந்தியர்களும் அடங்குவர்.
No comments:
Post a Comment