Tuesday, 23 May 2023

சீனர்கள் கட்சியா??

 



பொதுவாக ஜனநாயக செயல் கட்சி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவதெல்லாம்  அது ஒரு சீனர்கள் கட்சி என்பது  மட்டும் தான்.

அந்தக் கட்சிக்கு  ஏன் அப்படி ஒரு பிம்பம் ஏற்பட்டது என்று சொல்லத் தெரியவில்லை.  ஒரு வேளை ஆரம்பகாலத்தில் ஏன் இப்போதும் கூட சீனர்களே அதிகம்  பேர் பதவிகளில் இருப்பதால் அப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம்.

அது மட்டும் அல்ல.  அவர்களும் இன ஒதுக்கீட்டு முறையை கட்சியில் வைத்திருப்பதாகவே தோன்றுகிறது. சீனர்கள், இந்தியர்கள், மலாய்க்காரர்கள் - ஒவ்வொரு இனத்தவரும்  கட்சிப் பதவியில்  எத்தனை விழுக்காடு  இருக்கவேண்டும்  என்பதில் ஆரம்ப முதலே சீனர்கள் தெளிவாக இருக்கின்றனர்.  அது தவறு என்று சொல்வதற்கில்லை. காரணம் நகர்ப்புறங்களில் வாழும் சீனர்களே  அவர்களின் அசைக்க முடியாத  ஆதரவாளர்கள்.  சீனர்கள் ஆதரவு இல்லாமல் ஒரு இந்தியர் கூட பொதுத் தேர்தலில்  வெற்றிபெற முடியாது  என்பது நமக்குத் தெரியும்.  ஏன் சீனர்கள் ஆதரவு இல்லாமல்  கட்சிப் பதவியில் கூட ஓர் இந்தியர்   அமர வழியில்லை!  மலாய்க்காரர் நிலைமையும் அதே தான்!

ஜ.செ.க. ஒரு நகர்ப்புற கட்சி என்பதாலும் அது சீனர்களின் ஆதரவை நம்பியே இருக்கின்றது என்பதாலும் அது சீனர்களின் கட்சி என்பதாக முத்திரைக் குத்தப்பட்டு விட்டது  என்பது நமக்கு இப்போது புரியும். அதனால் தான் அது சீனர்கள் கட்சி..  இன்றளவும் அந்தக் கட்சி அந்த இனப்  பிடியிலிருந்து  விடுபட முடியவில்லை. 

இந்த சூழலில் தான் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து  பிரதமர் அன்வார் தலைமையில் அமைத்திருக்கும் பக்காத்தான் கூட்டணி ஒரு வரப்பிரசாதமாகவே  கருதப்படுகிறது. ஜ.செ.க. பிடிக்காது என்றால் பி.கே.ஆர். கட்சிக்குப் போடுங்கள். இல்லாவிட்டால் அந்தக் கூட்ட்ணிக்குப் போடுங்கள்.  இப்போது அந்தக் கூட்டணி தான் 
 ஒற்றுமை அரசாங்கம் என்னும் பெயரில்  நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிறது.

நம்மில் பெரும்பாலோர் தேசிய முன்னணியை ஆதரிக்கவில்லை. அதனால் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிக்கிறோம். அதற்குக் காரணம் பிரதமர் அன்வார் இப்ராகிம் தான். நல்லதையே செய்வார் என நம்புகிறோம்.

எப்படிப் பார்த்தலும் ஜ.செ.க. தனது சீனர் அடையாளத்தை இப்போதைக்கு இழந்துவிடும் என ஏற்பதற்கில்லை. ஆனால்  மலேசிய அரசியலில்  அது தவிர்க்க முடியாத ஒரு கட்சி.  சீனர்கள் கட்சி என்று சொன்னாலும் சீனர்களிடம் நல்ல பழக்கம் ஒன்று உண்டு. அவர்கள் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தரத்தை உயர்த்தினால்  அனைத்தும் தானாக வந்து சேரும் என்பது தான் அவர்களின் தாராகமந்திரம் அது நடக்கும்!

No comments:

Post a Comment