மித்ரா அமைப்பு ஒரு சில புதிய திட்டங்களை அறுவித்திருப்பதில் நமக்கு மகிழ்ச்சியே.
அதே சமயத்தில் டயாலிஸிஸ் என்று சொல்லும் போது ஏதோ இரண்டு மாதத்திற்கு மட்டும் உதவி செய்வோம் என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. பி.40 மக்கள் அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று மித்ரா எதிர்பார்க்கிறது என்பது தெரியவில்லை!
எனினும் அது பற்றி இங்கே நாம் பேசப் போவதில்லை.
மித்ராவின் தலைமத்துவத்தில் இருப்பவர்கள் பேசும் போது மிகவும் சாமர்த்தியமாக ஒரு சில விஷயங்களைக் கடந்து செல்லுகிறார்கள். நமக்கே அதனைக் கேட்கும் போது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நம்மால் பதில் சொல்ல இயலாதவாறு அவர்கள் பேசுகிறார்கள்! ஒன்றும் செய்ய இயலவில்லை!
மித்ரா அல்லது செடிக் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ம.இ.கா.வினர் மீது தான் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து விழுகின்றன. பொது மக்களும் பல குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டனர். நம் கண்முன் தான் அனைத்தும் நிகழ்கின்றன ஆனால் திருடர்கள் தப்பித்துவிடுகின்றனர். காரணம் எல்லாமே 'அவர் சொன்னார்! இவர் சொன்னார்!' என்கிற பாணியில் தான் நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன! அதனை வைத்து யார் என்ன செய்ய முடியும்?
மித்ரா தலைவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லுவது என்ன? அது தான் அவர்களின் சாமர்த்தியம். நமக்கு அந்த சாமர்த்தியம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் நம்மிடம் கேட்கின்ற ஒரே கேள்வி நம்மை அடித்து நொறுக்கி விடுகிறது. "உங்களிடம் ஆதாரம் இருந்தால் போலிஸுக்குத் தகவல் கொடுங்கள்!" என்பது தான் நம்மைப் பேச முடியாமல் செய்து விடுகிறது. அவர்கள் சொல்லுவதும் நியாயம் தான். அவதூறுகளை அள்ளி வீசலாம். ஆதாரம் இல்லாமல் பேசுவதால் என்ன பயன்?
ஆனால் ஒரு விஷயத்தில் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். கொள்ளையடிப்பவர்கள் கூடவே வழக்கறிஞர்களை வைத்துக் கொண்டு தான் அவர்களின் லீலைகளை ஆரம்பிக்கிறார்கள்! அதிலும் ஒரு சிலர் இன்னும் ஒரு படிமேல். தமது பிள்ளைகளையே அல்லது உறவுகளை வழக்கறிஞர்களாக்கி விடுகிறார்கள்! அவர்கள் ஆலோசனைப்படியே வெற்றிகரமாக கொள்ளையடிக்கிறார்கள்!
மித்ரா பண மோசடியில் எத்தனையோ பேர் மீது குற்றம் சாட்டினாலும் ஒரு தலைவனைக் கூட எதுவும் செய்ய முடியவில்லையே! அதைத்தான் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோமே!
ஆக, இன்றைய நிலையில் எந்தத் திருடனையும் கைது செய்வது அவ்வளவு எளிதல்ல. நான் சொன்னது போல கூடவே ஒரு திருடனை வைத்துக் கொண்டே கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்!
ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று சொல்லுகிறார்களே அதிலே உண்மை உண்டு. யாரும் யாரையும் ஏமாற்றிவிட முடியாது.
பாரதியார் சொன்னாரே: படித்தவன் சூதும் வாதும் புரிந்தால் ஐயோ! ஐயோ! என்று போவான்! என்பது முற்றிலும் உண்மை.
No comments:
Post a Comment