முஸ்லிம்- முஸ்லிம் அல்லாதார் பிரச்சனைகளைக் கலைய நடுநிலை மையம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்று இஸ்லாமிய விவகார , பிரதமர் துறை அமைச்சர் முகமட் நயிம் மொக்தார் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
'வரவேற்கத்தக்கது' என்று சொன்னாலும் எதனை வைத்து அதை வரவேற்பது? வாயளவில் எல்லாமே சரிதான். செயலளவில் ஒன்றுமே சரிவராது என்பது தான் கடந்தகால அனுபவம்!
முதல் கேள்வி: நடுநிலைமை என்பது சரிதான். அந்த மையமும் சரிதான். அந்த மையம் யார் கையில் இருக்கும்? அந்த மையம் எங்கு இருக்க வேண்டும்? இதனை முதலில் முடிவு செய்ய வேண்டும்.
பொதுவாக இந்த மையம் எதற்குத் தேவை என்றால் அது மத ரீதியான பிரச்சனைகளைக் கலைவது என்பது முன்பே முடிவாகிவிட்டது. சரி எங்கிருந்து நாம் தொடங்குவோம்? என்னைக் கேட்டால் முதல் கூட்டம் ஓர் இந்து கோவிலில் ஆரம்பிக்கட்டும். இரண்டாவது கூட்டம் ஒரு தேவாலயம். மூன்றாவது கூட்டம் ஒரு புத்த விகாரமாக இருக்கட்டும். அதற்கு அடுத்து பள்ளிவாசலாக இருக்கட்டும். நிரந்தரமாக ஒரு இடம் என்றால் ஓர் இந்து கோவிலாகவே இருக்கட்டும். இங்கு தான் பிரச்சனைகள் அதிகம் என்பதால் இந்த சிபாரிசை நாம் செய்கிறோம்.
இதனை ஏன் நாம் சிபாரிசு செய்கிறோம் என்றால் இந்த மையத்தில் உயர்வு தாழ்வு என்பது இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். முதல் கூட்டத்திலேயே 'நான் தாண்டா உயர்ந்தவன்! நீ தாழ்ந்தவன்!' என்று உயர்வாக நினைத்து செயல்பட்டால் அனைத்துமே பாழாகிவிடும்! நீதியும் கிடைக்காது! நியாயமும் கிடைக்காது! சும்மா தேநீர் குடித்துவிட்டுப் போக வேண்டியது தான்!
'நான் உயர்ந்தவன் எனக்கு அடுத்தபடியாகத்தான் நீ' என்று ஒருவன் நினைத்துவிட்டால் அப்புறம் எதுவுமே உருப்படப் போவதில்லை. அப்புறம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? நான் தான் உயர்ந்தவன் என்று வந்தால் அதற்கு என்ன பொருள்? நான் சொல்லுவதைத்தான் நீ கேட்க வேண்டும் என்பதுதானே பொருள்!
அமைச்சர் ஒரு நடுநிலைமை மையம் அமைக்க வேண்டும் என்பது நல்ல நோக்கம் தான். அதற்கு நடுநிலைமையாளர்களைத் தேட வேண்டும். நம் நாட்டில் நடுநிலையாளர் என்பதாக யாரும் இல்லை. அப்படி யாரையும் நாம் இதுநாள்வரை உருவாக்கவில்லை. அது நமக்குத் தேவையும் இல்லை என்பதனால்! நாம் சொல்லுவதைத்தானே மற்றவர்கள் கேட்க வேண்டும் என்றால் அப்புறம் யார் நடுநிலையாளர்?
நமக்குள்ள பிரச்சனையே நான் தான் உயர்ந்தவன் என்பது மட்டும் தான்! அதனை மட்டுப்படுத்த அமைச்சரால் முடிகிறதா என்று பார்ப்போம்! அதனையும் வரவேற்போம்!
No comments:
Post a Comment