Sunday 7 May 2023

'மனி' பிரச்சனையால் ஆட்டம் காண்கிறதா?


மனிதவள அமைச்சு  தள்ளாட்டம் ஆடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.  அமைச்சர் சிவகுமாருக்கு ஏனோ இப்படி ஒரு சோதனை  என்று  அனைவரும் தான் கேட்கிறார்கள்! என்ன பதில் சொல்ல?

பதவியேற்று ஒரு சில மாதங்களிலேயே  இந்த அளவுக்கு வேறு யாரும் எந்த சோதனைகளையும் சந்திக்கவில்லை என்றே சொல்லலாம்.

அமைச்சில் என்ன தான் பிரச்சனை என்பது முழுமையாகத் தெரியவில்லை.  நமக்குத் தெரிந்தவரை எந்த அமைச்சாக இருந்தாலும்  வழக்கமாக  பணிபுரிபவர்கள் அங்கு பணியில்  இருப்பார்கள்.  அவர்களைக் கொண்டு தான் அமைச்சின் பணிகளை அமைச்சரும் தொடர வேண்டும். அமைச்சரும் இவருக்கு  வேண்டியவர்களைப்  பணியில் அமர்த்திக்கொள்ள  வாய்ப்பு இருக்கலாம்.  ஆனாலும் திடீரென்று ஒருவரைக் கொண்டு வருவதும் போவதும் யோசித்துச் செய்ய வேண்டிய விஷயம்.

இந்த அமைச்சில் ஏன் இந்த அளவுக்குப் பிரச்சனைகள் என்பது  வெளியே உள்ள நமக்கு அவ்வளவு எளிதாகத் தெரிந்து கொள்ள  சாத்தியமில்லை. நம்முடைய கேள்விகள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்கி வந்த அமைச்சர் சிவக்குமார் ஏன் இப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டார் என்பது புரியாத புதிராக இருக்கின்றது.

அதெப்படி ஒரு சில மாதங்களிலேயே அமைச்சருக்கு இந்த நிலைமை? எங்கே தவறு நடந்தது? 

பொதுவாக மனிதவள அமைச்சு பணம் தாராளமாக புழங்கும் ஓர் அமைச்சு என்று சொல்லப்படுகிறது.  வெளிநாட்டுத் தொழிலாளர் என்றாகே  வாயில் எச்சில்  ஊறுபவர்கள் இருக்கிறார்கள்.!  அந்த அளவுக்கு வருமானம்  கொட்டுவதாகத் தெரிகிறது!

அனேகமாக வருங்காலங்களில் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைப்பது குதிரைக் கொம்பு என்று கணிக்கப்படுகின்றது. உள்நாட்டுத் தொழிலாளர்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தான் வேண்டும் என்று முதலாளிகள் அடம் பிடிக்கிறார்களாம். அதற்காக எந்த எல்லைக்கும் போக அவர்கள் தயாராய் உள்ளனர்.

ஆனால் உள்நாட்டுத் தொழிலாளர்களோ "எங்கள் எல்லையை விட்டு எங்களைத் துரத்தாதீர்கள்" என்று  குமுறுகிறார்கள்.  ஆனால் இவர்களால் அமைச்சில் உள்ளவர்களுக்கு என்ன இலாபம் என்று இலாப-நட்ட கணக்கைப் பார்க்க வேண்டிய நிலையில் அவர்கள்  இருக்கிறார்கள்! அதனால் எல்லாமே  ஒரே குழப்பம்.

ஊழல் தடுப்பு ஆணையம் தனது பணிகளை இப்படி "வழ வழ கொழ கொழ"  என்று இழுத்துக் கொண்டு போவதால்  நாமும் குழம்பிப் போகிறோம்! இப்படி இழுத்துக் கொண்டு போவதால்  அமைச்சின் பணிகள் பாதிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

என்னைக் கேட்டால் "வெட்டு ஒன்னு துண்டு இரண்டு" என்று ஊழல் தடுப்பு ஆணையம் செயல்பட வேண்டும். ஆனால் என்ன செய்ய?  அரசியல் என்று ஒன்று இருப்பதால் நின்று நிதானமாகத் தான் அரசாங்கம் செயல்பட வேண்டியுள்ளது!

மனிதவள அமைச்சு மீண்டும் சுறுசுறு வென இயங்க வேண்டும்! அதுவே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment