Wednesday 3 May 2023

ஐயா! திண்டுக்கல் லியோனி வருந்துகிறோம்!

 

நகைச்சுவை பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் முதன் முதலாக  மலேசியாவில் ஓர் அசாம்பாவிதத்தைச் சந்தித்தார் என்று தாராளமாய்ச் சொல்லலாம். பல உலக நாடுகளுக்குச் சென்றவர்.  இந்த உபசரிப்பு இங்குத் தவிர வேறு எந்த நாடுகளிலும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை!

தமிழ் நாட்டில் அவருக்கு அது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் மலேசியாவில் அதுவும் பினாங்கில் இது நடந்திருக்கக் கூடாது; ஆனால் அது நடந்து விட்டது.

இரண்டு மணி நேரம் தாமதம் என்பதற்காக இப்படி ஒரு அசாம்பவிதம் நடக்க வ்ழியில்லை. இந்நாட்டில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் குறிப்பிட்ட நேரத்தில் நடந்ததாகச் சரித்திரம் இல்லை! அதனால் நேரம் தான்  எதிர்ப்பாளர்களுக்கு ஒரு காரணமாக இருக்க நியாயமில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடந்தவை திட்டமிட்டு நடந்ததாகத்தான் தெரிகிறது. நேரத்திற்காக யாரும் இந்த அளவுக்குக் குரல் எழுப்பப் போவதில்லை. மலேசியாவில் நம்மைவிட பொறுமைசாலிகள் யாரும் இல்லை என்பது தெரியும். நாசிலெமாக் வாங்குவதற்கு விடிய விடிய காத்திருந்து வாங்கியவர்கள் நாம்! 

நம் நாட்டில்  நடப்பதெல்லாம்  ஏறக்குறைய தமிழ் நாட்டை ஒட்டித்தான் இருக்கும். ஒன்று:  இவர்கள் திராவிடர்களாக இருக்க வேண்டும். இரண்டு:  அண்ணா தி.மு.க. வின் ஆதரவாளர்களாக இருக்க வேண்டும். மூன்று: பா.ஜ.க. வைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இதற்கான விளக்கம் என்னவென்றால்:  தமிழர்களை எதிர்க்கின்ற திராவிடர்கள் எப்போதும்  நம்மிடையே இருக்கின்றார்கள். இரண்டு: அண்ணா தி.மு.க. ஆதரவாளர்களாக இருக்க வேண்டும். லியோனி தி.மு.க. வைச் சேர்ந்தவர். மூன்று: இந்துத்துவா அமைப்பினராக இருக்க வேண்டும். லியோனி கிறிஸ்துவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள்  கிறிஸ்துவ எதிர்ப்பாளர்களாக இருக்க வேண்டும்.

இவர்களைப் பின்னணியிலிருந்து  இயக்குபவர்கள் யாரென்று தெரியவில்லை. இதில் அதிசயம் என்னவென்றால் ஒரு பெண்மணி கூட  வாரிச்சுருட்டுக் கொண்டு தனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றார்! அட ஒரு நல்ல காரியத்திற்காக "வாங்க தாயே!"என்று கெஞ்சினால் கூட வரமாட்டார்கள்!  சீரியல் நாடகங்களில் மூழ்கிப் போயிருப்பார்கள்! 

நடந்தது தமிழ்  மக்களுக்குத் தான் வெட்கக்கேடு. தமிழர்களைத் தாக்கினால் பலருக்குச் சந்தோஷம். அதுதான் நடந்திருக்கிறது. இருந்தாலும் இது நடந்திருக்கக் கூடாது. நடந்துவிட்டது. இவர்களையெல்லாம் மீறி தான் தமிழன் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறான். அது தொடரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஐயா திண்டுக்கல் லியோனி,  இதனையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு மேடைகளில் பேசி சிரிக்க வைப்பார்! அது தான் அவரது இயல்பு.  ஆனால் மலேசியாவுக்கு இனி வரமாட்டார் என்பது மட்டும் உறுதி!

இப்படி ஒரு நிகழ்வுக்காக வருந்துகிறோம், வருந்துகிறோம், வருந்துகிறோம்!

No comments:

Post a Comment