Sunday 14 May 2023

புதிய திட்டங்களை வரவேற்கிறோம்!

 

மித்ரா அமைப்பின் தலைவர் டத்தோ ரமணன் மித்ரா அமைப்பின் சார்பில் பல புதிய திட்டங்ளை அறிவித்திருக்கிறார்.

வரவேற்கிறோம். வாழ்த்துகள். ஆனாலும் இது போன்ற புதிய திட்டங்களையும், புதிய அறிவிப்புகளையும் நாங்கள் கேட்பது ஒன்றும் முதல் முறையல்ல. இதெல்லாம் சர்வ சாதாரணம்.  யாராவது ஒருவர் மித்ராவின் தலைவர் என்று வந்துவிட்டால் இது போன்ற அறிவிப்புகள் என்பது சாதாரண விஷயம்! நாங்கள் இதற்கெல்லாம் பழக்கப்பட்டு விட்டோம்!

இது முதல் முறையா, இரண்டாவது முறையா மறப்பதற்கு?  பலமுறை ஏமாற்றப்பட்டிருக்கிறோம்!  தலைமத்துவ பீடத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் மக்களை மனசாட்சியில்லாமல் ஏமாற்றுகிறார்கள்  என்பது நமக்கு எல்லாமே அத்துப்படி! சமயங்களில் "என்னடா! படிக்காத காட்டுப்பயல்கள் மாதிரி நடந்து கொள்கிறார்களே!"  என்று நாமும் முணுமுணுப்பது உண்டு!

சரி, போனது போனது தான்! கொள்ளையடித்தவன்  கொள்ளையடித்தவன் தான்!  கொள்ளையடித்ததை அவன் திரும்ப கொடுக்க போவதில்லை! கூடவே ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொண்டு நிதானமாகத் திருடுகிறான்!  இப்போதெல்லாம் தனது வீட்டுப்பிள்ளைகளையே கொள்ளையடிப்பவன்,   வழக்கறிஞனாக மாற்றிவிடுகிறான்! என்ன செய்ய?

இப்போது மித்ராவின் மூலம் நமக்கு என்ன உதவிகள் தேவை என்பதை மட்டும் கவனிப்போம். முதலில் பொருளாதார வளர்ச்சி அடுத்து கல்வி. இதில் இரண்டிலும் எது முதல் எது இரண்டாவது என்கிற பேச்சுக்கு இடமில்லை.  உயர் கல்வி, கல்லூரி, பல்கலைக்கழகம் அனைத்திலும் நமது பி.40 மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். இதில் நமக்கு எந்த சமரசமும் இல்லை.

அடுத்து மேற்படிப்பைத் தொடர வழியில்லாமல்,  கல்வியில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான தொழில் பயிற்சி மிக மிக அவசியம்.  இப்போது நமது இளைஞர்கள் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல்  சும்மா தான் சுற்றிக்கொண்டு திரிகிறார்கள்.  அடுத்து நாம் பார்க்கும் இடம் என்றால் அவர்களைச் சிறையில் தான் பார்க்க முடியும். இது வருத்தத்திற்குரிய ஒரு செய்தி.  எந்த வேலையும் தெரியாமல் சும்மா சுற்றுபவன் அடுத்து என்ன செய்வான்? அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்.  அதனால் எப்பாடுப்பட்டாவது அவர்களுக்குத் தொழிற்திறன்  பயிற்சிஎன்பது மிக மிக முக்கியம்.  இதனை  மித்ரா மிகவும் கடுமையான பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதனைச் செயல்படுத்த வேண்டும்.

இனி நமக்கு எந்த ஒரு காரணமும் சொல்லத் தேவையில்லை. செயல்படுத்த வேண்டும். சமயங்களில் தவறாகக் கூடப் போகலாம். ஆனால் ஒவ்வொன்றொக்கும் பயந்து கொண்டு செயல்பட முடியாது. செயல்பட்டால் தான் புரியும் நாம் எங்கே தவறு செய்கிறோம் என்பது.

மித்ரா இனி நமக்கு எது தேவை, எது முக்கியம் என்று முடிவு எடுக்கிறதோ அதனைச் செயல்படுத்த வேண்டும்.  நமது வருங்காலத்தை நோக்கி எது நல்லதோ அதனை நோக்கி கவனத்தைச் செலுத்து வேண்டும்.

அதனால் எதனைச் செய்தாலும், சமுதாயத்திற்கு நல்லதைச் செய்தால் நாம் வரவேற்கிறோம்! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment