சென்ற ஆண்டு முழுவதும் உணவகங்களில் புகை பிடிப்பவர்களுக்கு எதிராக 30,648 அபராதங்கள் வெளியிடப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியிருக்கிறது.
அதன் மூலம் 76,00,000 இலட்சம் ரிங்கிட் வருமானத்தைப் பெற்றிருக்கிறது என்று சொல்லலாமா? இல்லை! அது வருமானம் அல்ல! இரத்தம் தோய்ந்த பாவக்கறை!
ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். அது நாட்டுக்கு நல்லது என்பது தான் சட்டத்தின் நோக்கம். மக்கள் நலனுக்கு அது நல்லது. புகைபிடிப்பது உடல் நலனுக்கு நல்லது என்றும் யாருமே சொன்னதில்லை. அது கெடுதல் என்பது தான் காலங்காலமாக சொல்லப்படுகின்ற செய்தி. ஆனால் யாரும் அதை சட்டை செய்வதில்லை!
பொது இடங்களில் அதுவும் குறிப்பாக உணவகங்களில் புகைபிடிப்பது எல்லா வகையிலும் தப்பு. பெரியவர், சிறியவர், குழந்தைகள் பலரும் வருகின்ற இடம் உணவகங்கள். பெரியவர்களைப் பார்த்துத் தான் குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். புகைபிடிப்பது அதில் ஒன்று.
ஆனால் இங்குள்ள பிரச்சனை எல்லாம் புகைப்பது உடல்நலனுக்குக் கேடு என்பது பற்றி யாரும் யோசிப்பது இல்லை. ஏன் அதனை நம்புவது கூட இல்லை.
"புகைக்க வேண்டாம் என்று சொல்லுகின்ற டாக்டர்கள் கூட புகைக்கிறார்களே!" என்று சொல்லுகின்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்பன் குடித்தால் மகன் குடிக்கத்தான் செய்வான்! இப்படித்தான் அந்தப் பழக்கம் தொடர்கிறது. இப்போது டாக்டரகள் பொது இடங்களில் குறிப்பாக மருத்துவமனைகளில், குடிப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் நிறுத்துகின்ற அளவுக்கு வந்துவிட்டார்கள். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். வழக்கம் போல அது அவரவர் பிரச்சனை. அவர்களே அதற்குத் தீர்வு காணட்டும்.
நமது அரசாங்கத்தை நோக்கி நமக்கு ஒரு கேள்வி எழுகிறது. தண்டம் போட்டும் உணவகங்களில் ஏன் புகைப்பதை யாரும் நிறுத்தவில்லை. குறைந்திருக்கிறதா என்பது கூட நமக்குத் தெரியவில்லை. சிங்கப்பூரில் மட்டும் அது எப்படி எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அதனைக் கடைப்பிடிக்கிறார்கள்? அப்படி என்ன நமது பலவீனம்? தண்டனை போதவில்லை என்பது தானே பொருள்? எதுவும் பயன் தராவிட்டால் தண்டனையைக் கூட்டுங்கள். ஆயிரம் வெள்ளி தண்டம் போடுங்கள்!
குறைவான தண்டம் செல்லுபடியாகவில்லை என்றால் தண்டம் கூட்டப்பட வேண்டும். அது தான் நியாயம். இந்த தலைமுறை கையில் கைப்பேசிகளை வைத்துக் கொண்டு கண்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. புகைப்பிடிப்பதால் புற்று நோயும் சேர்ந்து கொள்ளும்.
பாவம்! இந்த தலைமுறை! வருங்காலங்களில் நோயோடு போராடுவதே வேலையாகப் போய்விடும்! அதற்காகவாவது புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்!
No comments:
Post a Comment