Friday 1 December 2023

இந்து ஆலயங்கள் மட்டும் ஏன்?

 

நமது நாட்டில் இந்து ஆலயங்கள் உடைபடுவது என்பது அடிக்கடி  நடைபெறுகின்ற ஒன்று.

பொதுவாக வழிபாட்டுத்தலங்கள் உடைபடுவதை யாரும் விரும்புவதில்லை. அது எந்த வழிபாட்டுத்தலங்களாக இருந்தாலும் சரி  கோவில்கள், கிறித்துவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள், புத்த விகாரங்கள்  இப்படி எதுவாக இருந்தாலும் வழிபாட்டுத்தலங்கள்    உடைபடுவதை  எந்தவொரு சராசரி மனிதனும் அதனை விரும்புவதில்லை. அதனை விரும்பவும் மாட்டார்கள்.

அதுவும் தமிழர்களைப் பொறுத்தவரை  "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க  வேண்டாம்" என்று சொல்லும் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் நாம்.  அந்த அளவுக்கு  கோவில்களுடனான  தொடர்பு நமது.

ஆனால் நமது கோயில் சிலைகள்  தாம் அடிக்கடி ரௌடிகளால் உடைத்து நொறுக்கப்படுகின்றன என்கிற செய்தியை நாம் கேள்விப்படுகிறோம். பல்லின சமுதாயத்தில்  பல்வேறு தெய்வ வழிபாட்டுத்தலங்கள்  இருக்கத்தான் செய்யும்.  பொதுவாக மக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.  ஆனாலும் ஒருசிலரின்  தூண்டுதல்களினால்  அதுவும் குறிப்பாக அரசியல்வாதிகளின் ஏவுதல்களினால்  குண்டர் கும்பல்கள்   வன்மத்தைக் கையாள்கின்றனர் என்பது தான்  வருந்தத்தக்க செய்தி. 

அரசாங்கம் அதனைத் தூண்டுதல் என்பதை ஏற்றுக்கொள்ளவில்ல. அவர்களை மனநோயாளிகள் என்கிறது அரசாங்கம். உண்மை தான். நல்ல நிலையில் இருப்பவனுக்கு  அப்படியெல்லாம் செய்ய இயலாது.  'சாமி கண்ணைக்குத்தும்"  என்பது  அவனுக்கும் அவன் மொழியில் சொல்லப்பட்டிருக்கத்தானே  வேண்டும்?

ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.  அண்டை நாடான சிங்கப்பூரிலும் இந்து கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், புத்த விகாரங்கள் , ஏன்? யூத தொழுகைக்கூடங்கள் என்று அனைத்தும் இருக்கத்தானே செய்கின்றன?  ஒரே வித்தியாசம்.  மனநோயாளிகளை  அந்நாடு உருவாக்குவதில்லை என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.. அதனால் தான் அந்நாடு பலவகைகளில் பெருமை அடைகிறது. நாம்  சிறுமை அடைகிறோம்!  பாலஸ்தீன நாட்டிற்காக வசூல் செய்யப்பட்ட பணத்தில் கூட கைவைக்கிறார்களே! அதுவும் மனநோய் தானே!

இது போன்று ஆலய உடைப்புகளைத் தொடர்ந்து செய்தால் இந்நாட்டில் வாழ்பவர்கள் எல்லாம்  மனநோயாளிகள் என்பதாக உலக நாடுகள் முத்திரைக் குத்தும் காலங்கூட விரைவில் வரலாம்.  நம் நாடு ஓர் அளவே வளர்ந்த நாடு.  இன்னும் வளர வேண்டிய சூழலில் தான் இருக்கிறோம். அதற்குள்ளாகவே  நாட்டின் பேரைக் கெடுக்கும் யாராக இருந்தாலும்  அவர்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.  அவர்கள்  மனநோயாளிகளாக இருந்தாலும்  தண்டனைதான்  அதற்கான தீர்வு!

No comments:

Post a Comment