Thursday 23 July 2020

குடித்துச் சீரழியும் சமுதாயம்!

சில சமயங்களில் சில சங்கடங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது!

குடித்துக் கெட்ட சமுதாயம் என்று பெயர் எடுத்தவர்கள் நாம்! அதிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை! 

அது போதாது என்று சட்டைக்குள் அரிவாளை பதுக்கி வைக்கும் ஒரு கலாச்சாரத்தையும் நம் சினிமா கதாநாயகர்கள் நமது இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்!

அறிமுகப்படுத்திய கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது!  அவர்களைப் பின்பற்றும் நமது இளைஞர்களுக்கோ காவல்துறையினர் மூலம்  கொட்டு கொட்டு என்று கோடிக்கணக்கில் கொட்டு விழுகிறது! குடும்பம் சிதறுகிறது! பிள்ளைகள் அனாதைகளாகின்றனர்! 

சினிமா  என்பதை சினிமா தியேட்டர்களோடு முடித்துக் கொள்ள வேண்டும். சினிமா நடிகர் என்ன பண்ணுகிறார் என்கிற அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்குத் தேவை இல்லாதது!

சினிமா நடிகன் குடிகாரனாக இருந்தாலும் அவன் குடும்பம் சீரழிந்து போகும் என்பதற்கு நமக்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. நமது நிலை என்ன? அவனை விடப் பொருளாதார ரீதியில் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிறோம்! நாம் குடிகாரன் என்று பெயர் எடுத்தால் நமது குடும்பம் தாங்குமா?

நமது வயதான மூத்தக்குடிமக்கள் குடிகாரர்களாக இருந்ததற்குப் பல காரணங்கள் உண்டு.  அப்போது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை இப்போது இல்லை. குடித்து நமது அசதிகளைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இப்போது இல்லை. 

ஆனாலும் நமது குடிப்பழக்கம் ஒழிந்து போனதாகத் தெரியவில்லை! ஏதேதோ காரணங்கள் சொல்லி அதனை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறோம்!

நமது பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே குடிக்கிறார்கள் என்கிற உண்மை நமக்குத் தெரியும்  அவர்கள் பெற்றோர்களிடமிருந்து அதனைக் கற்றுக் கொள்கிறார்கள். அதிலும் ஒரு சில மாணவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு குடிக்கிறார்கள்! இதில் பெண்களின் பங்கும் உண்டு!

குடிகாரன்,  அப்பா அம்மா சொன்னால் கேட்க மாட்டான். சகோதரன் சொன்னால் கேட்க மாட்டான். மனைவி சொன்னால் கேட்க மாட்டான். பெற்ற பிள்ளைகள் சொன்னால் கேட்கமாட்டான்.

சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். கடுமையான தண்டனைகளைக் கொடுக்க வேண்டும். காவல்துறையினர் 'சாத்து!சாத்து!' என்று சாத்தினால் தான் அவனுக்குப் புத்தி வரும்!

இந்த சமுதாயம் இப்படியே தான் போய்க் கொண்டிருக்குமா என்பது புரியாத புதிராக இருக்கிறது! தலைவன் என்று சொல்லுபவனும் குடிக்கிறான்! தொண்டன் என்று சொல்லுபவனும் குடிக்கிறான்! தொழிலதிபன் என்பவனும் குடிக்கிறான்!  தொழிலாளி என்று சொல்லுபவனும் குடிக்கிறான்!

குடியை என்னால் நிறுத்த முடியாது என்று சொல்லுபவனுக்காக இதனைச் சொல்லுகிறேன். நண்பனே! உன் உழைப்பின் அசதி தீர இரவு நேரத்தில், உன் வீட்டில், அளவாகக் குடித்து உனது அசதியைப் போக்கிக் கொள். அதன் பின் தூங்கிவிடு! உனது நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளாதே! நீ குடிப்பது உன் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டாம்!

அது போதும்! உன்னை யாரும் குடிகாரன் என்று சொல்லப் போவதில்லை! உன் குடுமபத்திற்கு எந்த பாதிப்பும் வரப் போவதில்லை.

அளவோடு குடித்தால் உன் குடும்பம் சீரழியாது. உன்னால் சமுதாயத்திற்கும் எந்த கெட்டப் பெயரும் ஏற்படாது! உனது வேலைகளும் தடைப்படாது.

நண்பா! எல்லாவற்றையும் சிந்தித்துச் செயல்படு. உன்னால் உன் குடும்பம் பெருமைப்பட வேண்டும். உன் சமுதாயம் பெருமைப்பட வேண்டும். உன் உறவுகள் பெருமைப்பட வேண்டும்.

குடி, சீரழிக்கும்! சிறைக்கம்பிகள் உனக்காகக் காத்திருக்கும்! 

சீரழியாதே!

No comments:

Post a Comment