Sunday 19 July 2020

உணவகங்கள் மூடல்!

உணவகங்கள் மூடல் என்பது வேதனையான செய்தி தான்!

சிலாங்கூரில் சுமார் 25 உணவகங்கள் மூடும்படியான உத்தரவை சுகாதார அமைச்சிடமிருந்து பெற்றிருக்கின்றன.

ஒன்று: அவைகள் சுகாதாரத்தோடு இருக்கவில்லை.  இன்னொன்று: சமுக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை.

இதில் முதலாவது மிகவும் கண்டிக்கத்தக்கது. நாமெல்லாம் சிறு வயதிலேயே படித்திருக்கிறோம் சுத்தம் சுகம் தரும் என்று. நமது பெரியவர்களும் நமக்குச் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். 
அது போதும். வேறு எந்த விளக்கமும் தேவை இல்லை. வீட்டில் சுத்தம் இல்லை என்றால் நமக்குச் சாப்பிடப் பிடிக்குமா?

ஒரு முறை குளுவாங்கில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த கழிவறையில் சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல். அந்த இடத்தைப் பார்த்ததுமே அங்குச் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமால் போய்விட்டது! உணவகம் என்னும் போது எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். சுத்தம் செய்ய வேலையாள் இல்லையென்றால் முதலாளி தான் பொறுப்பெடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.  அப்படி செய்பவர்கள் தான் முதலாளி என்கிற பொறுப்புக்குத் தகுதியானவர்கள். 

இதற்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதற்குக் காரணம் கிட்டத்தட்ட மூன்று, நான்கு மாதங்கள் வியாபாரமே இல்லாத சூழல். வருமானம் இல்லாமால் சிரமப்பட்டு, உணவகங்கள் அடைப்பட்டுக் கிடந்தன.  உணவகங்கள் திறக்கும் போது "சுத்தம் இல்லை!" என்று சொல்லி அடைக்கச் சொன்னால் அதனை என்னவென்று சொல்லுவது? இது அக்கறையற்ற போக்கு என்று தானே சொல்ல வேண்டும்!

சமூக இடைவெளி என்பது கொஞ்சம் சிக்கலான பிரச்சனை. குடும்பத்தோடு வருபவர்கள் அதனைக் கடைப்பிடிப்பது சிரமம் தான்! இளைஞர் கூட்டம் வந்தால் அவர்களிடம் எடுத்துச் சொல்லி சமாளிக்கலாம்.  அதுவும் சொல்வதைக் கேட்கக் கூடியவர்களாக இருந்தால்! அதிகப்படியான நாற்காலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்! சீன உணவகங்களில் அப்படித்தானே செய்கிறார்கள். எப்படியோ அது நமது சாமர்த்தியம்!

ஏதோ காரணங்களைச் சொல்லி இப்படி வியாபாரம் தடைப்படுவது நல்லதல்ல.  நமது பொறுப்புக்களை நாம் சரியாகச் செய்தால் தடைப்படுவதைக் தவிர்த்து விடலாம்!

எப்படியோ இவைகளையெல்லாம் சமாளித்துத் தான் வியாபாரம் செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று நோயையே சமாளிக்கத் தெரிந்த நமக்கு இது முடியாதா, என்ன?


No comments:

Post a Comment