திடீர் தேர்தல் வந்தால் டாக்டர் மகாதிரும் அவரது ஆதரவாளர்களும் என்ன செய்வார்கள்?
அவர்கள் புதிய கட்சி தொடங்க வேண்டும். அந்தக் கட்சியின் சார்பில் அவர்கள் போட்டியிட வேண்டும்.
புதிய கட்சி தொடங்குவது கூட நடக்குமா என்றும் சொல்ல முடியாது! காரணம் ஆளுங்கட்சி அதற்குத் தடையாகக் கூட இருக்கலாம்! இன்றைய ஆளுங்கட்சி எந்த அளவுக்கு டாக்டர் மகாதிருக்கு முட்டுக்கட்டையாக இருக்குமோ அந்த அளவுக்கு அவர்கள் புதிய கட்சி தொடங்க தடையாக இருக்கலாம்!
இது அரசியல். நீதி, நியாயம் என்கிற வார்த்தைகளெல்லாம் இங்கு எடுபடாது! காரணம் அப்படித்தான் டாக்டர் மகாதிர் தனது ஆட்சி காலத்தில் இருந்தார்! அவரின் சிஷ்யர்கள் மட்டும் வேறு மாதிரியாகவா இருக்கப் போகிறார்கள்!
சரி அப்படியே தனி கட்சி அமைத்து போட்டி இடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தக் கட்சியை அவரால் மலேசிய அளவில் கொண்டு செல்ல முடியாது! அந்த அளவுக்கு அவருக்குப் படை பலம் இல்லை!
எப்படியோ தனித்து, தனிக்கட்சியாக அவரால் போட்டிப் போட முடியாது. வேறு கட்சிகளுடன் சேர்ந்து தான் அவர் போட்டியிட வேண்டும். அதற்கு அவருக்கு ஒரு கூட்டணியுடன் சேர வேண்டும் என்கிற ஒரே வாய்ப்பைத் தவிர வேறு தேர்வு இல்லை!
அதே சமயத்தில் மூன்றாவது அணி என்பதெல்லாம் நமது நாட்டில் சாத்தியமில்லை. அந்த அளவுக்கு நமக்கு அரசியல் அறிவு போதாது. நமது அரசியல் என்பது சமயமும், இனமும் கலந்த குறுகிய அரசியல்! இந்த அரசியலில் கொள்ளையடிப்பது கூட நேர்மை தான் என்று போதிக்கப்படுகின்ற அரசியல்!
அதனால் டாக்டர் மகாதிர் எந்தக்கட்சியுடன் கூட்டணி வைப்பார்? மீண்டும் அவர் நம்பிக்கை கூட்டணியுடன் தான் கூட்டணி வைக்க வேண்டிய சூழல் வரும்.
அப்போதும் அவர்களுக்கு இதே பிரச்சனை மீண்டும் தலை தூக்கும்! அவர்கள் அன்வார் பிரதமராக வருவதை ஆதரிக்காமாட்டார்கள்!
ஏதோ ஒரு நம்பிக்கை. இந்த முறை அதிகப் பெரும்பான்மையுடன் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது!
எப்படிப் பார்த்தாலும் டாக்டர் மகாதிருக்கு நம்பிக்கை கூட்டணி தான் மீண்டும் கை கொடுக்க வேண்டும்!
No comments:
Post a Comment