Friday 17 July 2020

கட்சி தாவல் சட்டம் ...!

கட்சி தாவல்,  சட்டத்துக்குப் புறம்பானது, என்று சட்டம் இயற்றும்படி இப்போது நாம் ஆங்காங்கே கேட்டு வருகிறோம்!

சிலாங்கூர் சட்டசபையும் இப்படி ஒரு தீர்மானத்தை இயற்றி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது!

இந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்மானம் தேவை என்று நினைத்திருந்தால் அதனைப் பக்காத்தான் கட்சி ஆட்சியில் இருக்கும் போதே செய்திருக்க வேண்டும்.  அவர்கள் செய்யவில்லை! 

இப்படி ஒரு தீர்மானத்தை அவர்கள் ஆட்சியில் இருக்கும் போதே செய்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சியை இழந்திருக்க மாட்டார்கள்! இப்படி ஒரு நிலைமை டாக்டர் மகாதீருக்கு ஏற்பட்டிருக்காது!

செய்யவேண்டிய நேரத்தில் அவர்கள் செய்யாததால் அன்று கொள்ளையர்களாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று கோமாதாக்களாகப் போற்றப்படுகிறார்கள்!

ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம். எதுவும் நடப்பது தான் ஜனநாயகம்! கேடு கெட்டவர்களுக்கெல்லாம் அடைக்கலம் தருவது ஜனநாயகம்!

ஆனால் இன்று இது பற்றிப் பேசுவது கேலிக் கூத்து என்று சொல்லலாம்! இன்றைய ஆளுங்கட்சி ஒரு சில மாநிலங்களைத் தங்கள் கைவசம் கொண்டு வந்தது இந்தக் கட்சி தாவல் மூலம் தான்!  இன்றைய ஆட்சி இன்னும் நீடிக்கிறது என்றால் கொரோனா மட்டும் காரணம் அல்ல, கட்சி தாவல் தான் தலையாய்க் காரணம்!

எதிர்க்கட்சிகள் எல்லாக் காலங்களிலும் கட்சி தாவல் பற்றி பேசுவார்கள். அதற்குக் காரணம் அவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களே ஆளுங்கட்சியாக மாறினால் அப்போதுங் கூட அவர்கள் கட்சி தாவலைப் பற்றி வாய்த் திறக்கமாட்டார்கள்!  அப்போதும் அவர்கள் பலவீனம் எங்கோ இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்.

ஒன்று மட்டும் நிச்சயம். அப்படி ஒரு சட்டம் எந்தக் காலத்திலும் வராது என்பதை உறுதியாக நம்பலாம்! காரணம் கட்சி தாவல் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் தேவையான ஒன்று. தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுவார்கள்!

இந்தக் கட்சித் தாவலை,  வாக்களித்தவர்கள் மட்டும் தான் எதிர்ப்பாளர்கள்! உண்மையான எதிர்ப்பு என்பது பொது மக்களிடமிருந்து தான் வரவேண்டும். அரசியல்வாதிகள் பக்கமிருந்து வராது.  காரணம், இந்தக் கட்சித் தாவல்கள் மூலம் கோடிக்கான வெள்ளிகள் கைமாறுகின்றன.  இந்த ஐந்து வருடங்களில் பார்க்காத பணத்தை அந்த ஒரு தாவலின் மூலம் ஓர் அரசியல்வாதி பார்த்து விடுகிறான்! ஒரு தாவலின் மூலம் பல தலைமுறைக்கு அவன் பணம் சம்பாதித்து விடுகிறான்!

இப்போது சொல்லுங்கள்,இந்த நிலையில், எந்த அரசியல்வாதி எதிர்ப்பான்?  கட்சிக்குக் கொள்கை இருக்கிறது. எந்த அரசியல்வாதிக்குக் கொள்கை இருக்கிறது? அவன் கட்சியின் கொள்கையே அவனுக்குத் தெரியாது!

அரசியல் என்பதே பணம் கொட்டும் ஓர் அமுதசுரபி. நேர்மை, நீதி என்பதெல்லாம் பாடப் புத்தகங்களில் உள்ள ஒரு பாடம்! தேவை என்றால் இதில் சமய நூல்களையும் சேர்த்துக் கொள்ளலாம்! அவ்வளவு தான்!

கட்சி தாவலாம்! சட்டம் தாவலாம்! கட்சி தாவல் சட்டமும் தாவலாம்!

No comments:

Post a Comment