கொரோனா தொற்று நோயினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது பெரிய பாதிப்பு என்பதில் ஐயமில்லை.
மலேசிய பொருட்களை வாங்கி ஆதரிப்பீர் என்று பிரதமர் முகைதீன் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். நாட்டில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு வெள்ளியும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்பது நமக்குப் புரிகிறது.
ஆனால் எது தான் உள் நாட்டுப் பொருள்? என்பதில் எனக்கு ஐயமுண்டு. உள்நாட்டுப் பழங்கள் எது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் டுரியான் பழம் என்றால் கூட அது இந்தோனேசியப் பழம் என்கிறார்கள் அல்லது தாய்லாந்து பழங்கள் என்கிறார்கள்! மற்ற வகைப் பழங்கள் உள் நாட்டுப் பழங்கள் தான், அவைகள் நமக்குத் தெரிந்தவை.
உள் நாட்டு உணவகங்களில் நாம் சாப்பிடுகிறோம். இவைகளும் உள்நாட்டுப் பொருள்கள் தான் என்று நினைக்கிறேன். சுற்றுலாப் பயணங்ள் என்பது எல்லாருக்கும் அமையப்போவதில்லை. ஆனால் வெளி நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். உள்ளூர் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வரலாம். அது சாத்தியமே. அதனை நம் மக்களே புரிந்து கொள்ளுவார்கள்.
ஓர் ஐயமுண்டு. நம் பணத்தை உள்நாட்டில் தான் நாம் செலவு செய்கிறோம். வெளி நாடுகளுக்குப் போவதால் நமது பணம் வெளிநாடுகளுக்குப் போகிறது. அதை மட்டுமே நாம் தவிர்க்க வேண்டும். மற்றபடி உள்நாட்டில் செலவு செய்யப்படுகின்ற பணம் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்பது தான் அரசாங்கம் நமக்குச் சொல்ல வருவது.
அதைத்தான் இப்போது நாம் செய்கிறோம். அரசாங்கம் சொல்ல வருவது எல்லாம் வெளி நாடுகளுக்குப் போகாதீர்கள் என்பது தான் என்று நான் நினைக்கிறேன்.
அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். வெளி நாடுகளுக்குப் போவதை தவிர்க்கலாம். உள்நாட்டு சுற்றுலா பயணங்களுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கலாம்.
வேறு வகையில் நாம் எப்படி உதவ முடியும்? நமக்குத் தெரிந்த சில எளிய வழிகளை நாம் பின்பற்றலாம். நாம் செய்கின்ற செலவுகள் அனைத்தும் உள்நாட்டில் தான். நாம் வாங்குகின்ற பொருட்கள் அனைத்தும் உள்நாட்டில் தான். இதன் மூலம் தான் நாம் மீட்சி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்.
வெளி நாடுகளுக்குப் போகிறவர் யார்? அரசியல் பின்னணி உள்ளவர்கள் தான் வெளி நாடுகளுக்குச் சென்று 'ஷோப்பிங்' செய்கிறார்கள்! இவர்களை முடக்கி வைத்தாலே போதும் பொருளாதாரம் மீட்சி பெற்றுவிடும்! கொள்ளையடித்த பொருள்களை வெளிநாடுகளில் தானே அவர்கள் செலவு செய்கிறார்கள்!
மலேசியப் பொருட்களை வாங்குவதில் நமக்கு எந்த தயக்கமுமில்லை. ஆனால் அரசியல்வாதிகளுக்கு அந்த தயக்கமுண்டு.
அரசியல்வாதிகள் வீட்டுப் பெண்களுக்குத் தான் இந்த அறிவுரை பொருந்தும்!
ஆனாலும் பொது மக்களாகிய நாம் நமது கடமைகளைச் செய்வோம்! உள்நாட்டுப் பொருள்களை வாங்கி நமது நாட்டின் பொருளாதாரம் உயர நம்மாலானதைச் செய்வோம்!
வாழ்க மலேசியா!
No comments:
Post a Comment