Thursday 16 July 2020

இங்கேயும் இலஞ்சமா?

"அம்மாடியாவ்! இங்கேயும் இலஞ்சமா?"   என்று கேட்கும் அளவுக்கு இலஞ்சம் எல்லை மீறிவிட்டது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது!

ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் காவல் துறைத் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் பாடோர்,  நாட்டின் எல்லைப் புறங்களிலே இலஞ்சம் தண்ணீராய் ஓடுகிறது என்று கொந்தளித்துப் பேசியிருந்தார்!

இப்போது இன்னொரு அடி! தங்களுக்குப் பதவி உயர்வு வேண்டும் என்பதற்காக காவல்துறையைச் சேர்ந்தவர்கள். போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற,  இலஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்க நினைக்கிறார்களாம்!

இப்போது காவல் துறை எப்படி இயங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது!ஒரு இடத்தில் கொடுத்தால் இன்னொரு இடத்தில் வாங்க வேண்டும்! அதைத்தான் காவல் துறை செய்கிறதோ!

இலஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற வேண்டும், இலஞ்சம் கொடுத்து பதவி உயர்வு பெற வேண்டும்  என்று நினைக்கும் அதிகாரிகள் எப்படி தங்களது தொழிலில் பற்றுறுதியோடு இருப்பார்கள் என்கிற கேள்வி எழுகிறது!

இலஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் நேர்மையற்றவர்கள், நீதி நேர்மையற்றவர்கள், நாட்டுப்பற்றற்ற துரோகிகள், சுயநலவாதிகள் - இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!  நாட்டுப்பற்றுள்ளவர்கள் இலஞ்சம் பக்கமே தலை வைத்தே படுக்க மாட்டார்கள்!

ஆனால் காவல் துறைத் தலைவரே நெஞ்சம் வெதும்பி பேசியிருக்கிறார். அதனை அவர் கடுமையாகவே கருதுகிறார் என்பது அவர் பேச்சில் தெரிகிறது.  இலஞ்சம் கொடுப்பவர் மீதும் குற்றம், இலஞ்சம் வாங்குபவர் மீதும் குற்றம்.  ஆனால் இது பொதுவான சட்டம். ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அதனை காவல் துறையில் உள்ளவர்கள் செய்வார்களானால் அது மிகவும் கடுமையானது. இலஞ்சத்தைக் கொடுத்து சோம்பேறிகள்  மிக எளிதாக பதவி உயர்வு பெறுவார்களானால் அவர்களால் நாட்டுக்கு எந்த விதப் பயனுமில்லை. அவர்கள் எளிதாகவே அனைத்தையும் சாதிக்கப் பார்ப்பார்கள்! கடுமையான உழைப்பு இருக்காது! பொது மக்களை ஆழம் பார்ப்பவர்களாக இருப்பார்கள்!

எது எப்படி இருப்பினும் காவல் துறைத் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது!  அவரே  கூறியிருப்பது போல இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

பதவி உயர்வுக்காக இலஞ்சம் கொடுப்பது என்பது மிக மிக மட்டமான செயல். அப்படி என்றால் கடும் உழப்பாளிகள் அடி மட்டத்திலேயே இருக்க வேண்டுமா? பதவி உயர்வுக்குத் தகுதியானவர்கள் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்க வேண்டுமா? பல கேள்விகள் உண்டு.

காவல் துறைத் தலைவர் சொல்லுவது போல இது போன்ற நடவடிக்கைகளை அவர் இனிச் சகித்துக் கொள்ள மாட்டார் என நம்பலாம்.

இவர்கள் மீது நடவடிக்கை, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்னும் உத்தரவாதமே போதும்!

இலஞ்சம் ஒழியும் என நம்புவோம்!

No comments:

Post a Comment