Tuesday 28 July 2020

அஞ்சா நெஞ்சன்!

தமிழ் நாட்டில் "அஞ்சா நெஞ்சன்!" என்று சொன்னால்  குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  அது சும்மா ஓர் அடுக்கு மொழிக்காக வைக்கப்படுவதே தவிர மற்றபடி அவருக்கும் அஞ்சா நெஞ்சனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

அது ஒரு பெரிய வீராதி வீரனுக்குப் போய் சேர வேண்டிய ஒர் அடைமொழி.  ஆனால் என்ன செய்வது? அது போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரவில்லை! இடையிலேயே அரசியல்வாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு, இப்போது ரௌடிகளுக்குப் போய் சேர்ந்துவிட்டது!

நம் நாட்டில் அஞ்சா நெஞ்சன் என்றால் யாரைச் சொல்லலாம்?  யோசித்துப் பார்த்தால் நமது முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இதற்கு மிகப் பொருத்தமானவர் என்று தோன்றுகிறது!

நமது தானைத் தலைவர் துன் சாமிவேலு இந்தியர்களுக்கு மட்டும் தான் துரோகம் செய்தார்!  ஆனால் நஜிப் அனைத்து மலேசியர்களுக்கும் துரோகம் செய்தவர்!

 இன்னும் சில காலம் பதவியில் இருந்திருந்தால் நாட்டை சீனாவுக்கு அடகு வைத்திருப்பார்! ஒரு பிரதமர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு மிகப் பொருத்தமானவர் நஜிப். 

உலகில் யாரும் செய்யாத அளவுக்கு, பதவியில் இருந்து கொண்டு, பல அநியாயங்களைச் செய்தவர். அவர்,  மனைவியின் தூண்டுதலால் தான் அத்தனையும் செய்தார் என்று மக்கள் பேசிக் கொண்டாலும் சட்டத்தின் முன் அதெல்லாம் எடுபடாது!

ஆனால் எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு "நான் அவனில்லை!" என்று அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நாட்டுக்குள் வலம் வந்து கொண்டிருந்தாரே அதனை யாரால் செய்ய முடியும்! அந்த தைரியம், அந்த துணிவு யாருக்கு வரும்! அதைக் கண்டு நான் வியக்கிறேன்! 

"நான் குற்றவாளி இல்லை!" என்று, அத்தனை குற்றங்களையும் செய்துவிட்டு, யாரால் இப்படிப் பேச முடியும்! மிகவும் நெஞ்சுறுதி மிக்க மனிதர்! வெறும் பண மோசடி மட்டும் தான் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்களா? இல்லை! வேறு குற்றச்சாட்டுகளும் உண்டு! ஆனால் தனது பதவியைப் பயன்படுத்தி அனைத்தையும் மறைத்து விட்டாரே! அது சாதாரண விஷயமா! ஒன்றைத் தொட்டால் இன்னொன்று தொடரும்! முடிவே இல்லை! ஆனால் அனைத்தையும் அவரால் மறைக்க முடிந்ததே!  மற்றவர்களால் முடியுமா?

உண்மையில் அஞ்சா நெஞ்சன் என்றால் அதற்குப் பொருத்தமான மனிதர் முன்னாள் பிரதமர் நஜிப் தான்!  வேறு எவரும் அவரை நெருங்க முடியாது!

அத்தனை அட்டூழியங்களையும் செய்து விட்டு தேர்தல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார், வீர வசனம் பேசுகிறார், மற்றவர்களைக் கிண்டல் அடிக்கிறார் - அடாடா! என்ன சாமர்த்தியம்!  என்ன சாதுரியம்! 

இந்நாட்டு மக்களை மடையர்கள் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டார்! அதனால் தான் இப்படியெல்லாம் அவரால் பேச முடிகிறது!

ஆனால் அவர் ஒன்றை மறந்துவிட்டார். இறைவன் ஒருவன் உண்டு என்பதை மறந்து விட்டார்!

நாம் இறைவனை நம்புவோம்!

No comments:

Post a Comment