Saturday 18 July 2020

இதற்கு யார் பொறுப்பு?

ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை!

மாதா மாதம்   Indah Water - க்குப் பணம் கட்டி வருகிறோம்.  எதற்கு? வெறும் குப்பைக் கூளங்களை அள்ளிக் கொண்டு போகிறார்களே,  அதற்காகவா? 

அது சரியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் அதில் வேறு ஒரு விஷயமும் அடங்கி இருக்கிறது. ஏன், ஒவ்வொரு வீட்டிலும், மலக்குழி தொட்டிகள் (septic-tank) என்று ஒன்று இருப்பது Indah Water-க்குத் தெரியாதா?  அதை அவர்கள் மறந்தே போனார்களா அல்லது நாம் தான் மறந்து போனோமா?

ஒரு காலக் கட்டத்தில் மலக்குழி தொட்டிகளை அவர்கள் தான் சுத்தம் செய்தார்கள்.  எந்தக் கட்டணமும் கட்ட வேண்டிய அவசியமில்லை.
 நாம் அவர்களுக்கு மாதா மாதம் பணம் கட்டுவது அதற்காகத்தான்! ஆனால் இப்போது அவர்களே அந்த நடைமுறையை மாற்றிக் கொண்டார்கள்.  அவர்கள் அப்படி மாற்றிக் கொள்ள அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை! அந்த வேலையை அவர்கள் செய்ய மாட்டார்களாம்! நாமே தான் செய்ய வேண்டுமாம்!

அப்படித்தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!  தனியார் நிறுவனம் மூலம் என் வீட்டில் சில வேலைகளைச் செய்ய நேர்ந்தது. அந்த நண்பரிடம் விசாரித்த போது அவர் தான் இந்தத் தகவலைச் சொன்னார். 

பொது மக்கள் எந்த ஒரு புகாரும் செய்யாததினால் இப்போது அவர்கள் வைத்ததே சட்டம் என்கிற ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டதாக  அவர் சொன்னார். 

ஒரு வேளை அவர்கள் அதற்குக் கட்டணம் வாங்கலாம்.  ஆனால் அங்கும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கட்டணம் வாங்குகிறார்கள். எல்லா இடத்திலும் இலஞ்சம், ஊழல் - இது தான் வாழ்க்கை முறை என்கிற ஒரு நிலைமை நாட்டில் ஏற்பட்டுவிட்டது! யார் ஏமாறுவார் என்று காத்துக் கிடக்கிறார்கள்!

இப்படிப் பொறுப்பாக செயல்பட வேண்டியவர்கள் எல்லாம் பொறுப்பற்று செயல்படுவதால் எந்த ஒரு அரசு அலுவலகத்திற்குப் போனாலும் எல்லாமே பொறுப்பற்ற முறையில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன!

இந்த நிறுவனம், ஒவ்வொரு மாதமும்,  கோடிக்கணக்கில் பணம் புரளுகின்ற ஒரு நிறுவனம்.  ஆனால் இவர்களின் சேவை என்பது இப்போதைக்குக் குப்பைகளை அள்ளுகின்ற வேலை மட்டும் தான்!  பயனீட்டாளர்களுக்கு வேறு எந்த சேவையையும் இவர்கள் செய்வதில்லை!

இவர்கள் சேவை என்ன என்பது பயனீட்டாளர்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும். மக்களுக்குத் தெரிய வேண்டும். ஆனால் அனைத்தும் ஏதோ மறைமுகமாக நடப்பது போல் நிறுவனத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன!

பொதுவாக இவர்களின் சேவை பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை, வீட்டில் மலக்குழி தொட்டிகளில் அடைப்பு ஏற்படும் வரை!  அப்போது தான் இவர்களின் சேவையை நாம் நாடுகிறோம்! அந்த அடைப்புக்கள் கூட எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஏற்படுகிறது! அதனால் தான் இவர்கள் பொறுப்பிலிருந்து இவர்கள் தப்பித்து விடுகிறார்கள்!

இதற்கான நடவடிக்கைகளைப் பயனீட்டாளர்கள் சங்கம் தான் எடுக்க வேண்டும். அவர்கள் தான் பயனீட்டாளர்களின் குரல்.

இதற்கு அந்த Indah Water நிறுவனமே பொறுப்பு!

No comments:

Post a Comment