Thursday 21 July 2016

நமக்கு வெற்றிதான் வேண்டும்!


நமது தமிழினம் தலைநிமிர வேண்டுமானால் நமக்கு வெற்றி தான் வேண்டும். எவ்வளவோ பேசலாம்; எவ்வளவோ எழுதலாம். நாம் பேசுவதும் வெற்றியாகத் தான் இருக்க வேண்டும். நாம் எழுதுவதும் வெற்றியாகத்தான் இருக்க வேண்டும்!

வெட்டிப்பேச்சு வெற்றியைக் கொண்டு வரப்போவதில்லை! எட்டிப்பேச்சு வெற்றியை ஓட வைக்கும்! வெறும் வெற்றெழுத்து வெற்றியைக் கொண்டு வரப்போவதில்லை! வீண் எழுத்து  வெண்சாமரம் வீசுவதில்லை!

காலை எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும்வரை நமது பேச்சு, சிந்தனை, செயல் அனைத்தும் வெற்றியை நோக்கியே இருக்க வேண்டும். பேச்சும், மூச்சும் வெற்றியாகவே இருக்க வேண்டும்.  வெற்றி எனும்  நற்கனி இருக்கும் போது நச்சுக்கனி எதற்கு?

பேசுங்கள் நல்லதையே பேசுங்கள். எழுதுங்கள் நல்லதையே எழுதுங்கள்.

இன்று முதல் பயிற்சியை ஆரம்பியுங்கள். இந்த நிமிடம் முதல் யாரையும் குறை சொல்லுவதில்லை என்று உறுதிமொழி  எடுத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டிலிலிருந்தே தொடங்குங்கள். மனவியாகட்டும், பிள்ளைகளாகட்டும், வீட்டு வேலைக்காரியாகட்டும்  - யாராக இருந்தால் என்ன - நல்லதையே பேசுங்கள்.நல்லதைப் பாராட்டுங்கள். பிள்ளைகளைப் பாராட்டுங்கள்! மனைவியைப் பாராட்டுங்கள்! வேலைக்காரியின் சமையலைப் பாராட்டுங்கள்! திட்டிக்கொண்டேசெய்பவள் கூட திருத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் போட்டுக் கொள்ளுவாள்! பிள்ளைகள் கூட,  பாடங்களைச் சிறப்பாகச் செய்தால்,  அப்பா பாராட்டுவார் என்று இன்னும் சிறப்பாகச் செய்ய ஆரம்பிப்பார்கள்! மனைவி கூட உங்களின் மாற்றத்தைக் கண்டு அவரும் தன்னைக் மாற்றிக் கொள்ளுவார்!

வீட்டில் ஆரம்பிக்கும்  இந்தப் பழக்கம் வெளியிலும் வழக்கமான பழக்கமாக  வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி நல்லது செய்பவர்களைப் பாராட்டுகிற பழக்கம் தான் உங்கள் வெற்றிக்கான முதல்படி என்பதை மறவாதீர்கள். வெற்றி பெற்றவர்களிடம் இந்தப் பாராட்டும் குணம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நீங்கள் வெற்றியாளராக உங்களை மாற்றிக்கொள்ள விரும்பினால் முதலில் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். ஏர் ஏசியாவின் டோனி பெர்னாண்டஸ் எப்படி மற்றவர்களைக் கவருகிறார்? அவரது புன்னைகையும், அவரது பேச்சும், அவரது பாராட்டும் மற்றவர்களைச் சுண்டி இழுக்கின்றன அல்லவா!

ஒரு கோடிஸ்வரரான அவரது குணத்தை நாமும் ஏன் பின்பற்றக்கூடாது? அவரைப் போல நமக்கும் வெற்றிதானே நமது இலக்கு. வெற்றி தான் நமது இலக்கு என்றால் வெற்றிக்கான முதல்படியில் முனைப்புக் காட்டுவோம்!

வெற்றி நமதே!

No comments:

Post a Comment