Tuesday 19 July 2016

நம்மாலும் முடியும்!


வர்த்தகம் செய்வது ஏதோ சிலருக்குத்தான் வரும் என்று சொல்லிக்கொண்டு காலத்தை வீணடிக்காதீர்கள். சிலருக்கு மட்டும் தான் வரும் என்பது உண்மையல்ல. அந்த ஒரு சிலர் முயற்சி செய்கிறார்கள் அவர்களுக்கு வருகிறது. முயற்சி செய்யாதவர்களுக்கு அது எப்போதுமே வருவதில்லை! முயற்சி செய்யாமல் அது எப்படி வரும்?

முயற்சி எடுக்கும் போதே நம் மனதில் ஒரு முட்டுக்கட்டை வந்து சேருகிறது. நம்மால் முடியுமா என நாம் எண்ணும் போதே அங்கு ஒரு தடைக்கல்  வந்து சேர்ந்து விடுகிறது! நீங்கள் முயற்சி எடுத்ததற்கான காரணமே உங்களால் முடியும் என்னும் ஒரே காரணத்தினால் தான்! முடியும் என்று நினைத்து, முயற்சிகளை எடுத்த பிறகு "முடியுமா?" என்னும் எண்ணம் வரவே கூடாது! எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு, நல்லது கெட்டதுகளை புரிந்து கொண்ட பிறகு, முன் காலை எடுத்து வைத்தப் பிறகு அதன் பின்னர் மீண்டும் "முடியுமா?" என்னும் எண்ணமே வருதல் கூடாது!

வர்த்தகத் துறையில் அனுபவம் பெற விரும்பவர்களுக்கு இன்று நாடெங்கிலும்  பல இடங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறு தொழில்களில் பயிற்சி பெற விரும்பவர்களுக்கு அரசாங்கமே பல பயிற்சிகளை வழங்குகின்றது. இந்திய வர்த்தக சபையினரும் பலவித பயிற்சிகளை ஆர்வமுள்ள இளைஞர்களுக்குக் கொடுக்கின்றனர். .நாம் தான் எல்லாத் தகவல்களையும் பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எல்லாத் தகவல்களும் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள்  நிறையவே இருக்கின்றன. இணையத்தளம், நாளிதழ்கள் சென்று அலசி ஆராய வேண்டும். கிணற்றுத் தவளைகளாக  இருந்துவிட்டு "அதிர்ஷ்டம் இல்லை" என்று தலையில் அடித்துக் கொள்ளுவதில் அர்த்தமில்லை!

உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள்.வர்த்தகத்தில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லாம் எதனை முக்கியமாகக் கருதுகிறார்கள் என்று கவனியுங்கள். அவர்கள் வர்த்தகத்தில் இருப்பதற்கு எது உந்து சக்தியாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். ஆம்! பணம் தான் உந்து சக்தி! பொருளாதார உயர்வு தான் உந்து சக்தி!

உங்கள் வாழ்க்கையைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல பணம்தேவை. குடும்பம் குதூகளித்து வாழ பணம் தான் முக்கியமாகக் கருத்தப்படுகின்றது. நாலு பேருக்கு நல்லதைச் செய்ய பணம்  தேவை. கோவில் குளங்களுக்குச் சென்று வர பணம் தேவை. கோவில் கும்பாபிஷேகம் செய்ய பணத்தை நீங்கள் அள்ளிக் கொடுக்கலாம். பள்ளிக்கூடங்கள் கட்ட பணத்தை அள்ளிக் கொடுக்கலாம். ஏழை எளியவர்களுக்கு பணம் கொடுத்து உதவலாம்.

அந்தப் பணம் எங்கிருந்து வரும்? அது வர்த்தகத்தில் மூலம் தான் வரும். அந்த வர்த்தகத்தை நாம் ஆள வேண்டும். நம்மால் முடியாது என்று ஒன்றுமில்லை. மற்றவர்களால் முடிந்தால் நம்மாலும் முடியும். அதனை மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள். ஒரு சீனன் அரைக்கிறுக்கனாக இருந்தால் கூட நாம் அவனுடன் பொருள்களை வாங்கி ஆதரிக்கிறோம். நம் மக்கள் நம்மை ஆதரிக்க மாட்டர்களா, என்ன?

முடியும்! முடியும்! என்று சொல்லுங்கள். நம்மாலும் முடியும்! துணிவைத் துணையாகக் கொண்டு "நம்மாலும் முடியும்" என்று சொல்லுங்கள்! நம்மால் நிச்சயம் முடியும்!


No comments:

Post a Comment