Wednesday 6 July 2016

பள்ளி உண்டு - மாணவர் இல்லை!


நமது நாட்டில் என்ன நடக்கிறதோ அது போலவே தமிழ் நாட்டிலும் நடப்பது ஆச்சரியம் தரும் செய்தி!

சமீபத்தில்  தமிழக தொலைக் காட்சி ஒன்றின் செய்தினைக் கேட்க நேர்ந்தது. அந்தச் செய்தியில் தமிழகக் கிராமமொன்றில் பள்ளிக்கூடம் போக மாணவர்கள் இல்லை! ஆசிரியர்கள் ஏழு பேர் பள்ளிக்கூடத்திற்குத்  தினசரி  போய் வருகின்றனர். அதுவே செய்தி.

நமது நாட்டில் தமிழ்ப் பள்ளிகளை மூடுவதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனை முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலும் ஏறக்குறைய அதே நிலைமை தான்!

சில ஆண்டுகளுக்கு முன் நூறு மாணவர்களைக் கொண்ட அந்தப் பள்ளி இப்போது காலியாகக் கிடக்கிறது. மாணவர்கள் என்ன ஆனார்கள்? இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அருகிலுள்ள ஆங்கிலப் பள்ளிகளுக்கு மாற்றலாகி விட்டார்கள்!

இதன் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிகளின் அருகிலேயே ஆங்கிலப் பள்ளிகளைக் கட்டுவது ; கட்டிய பின்னர் தமிழ்ப்பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களை ஆங்கிலப் பள்ளிகளுக்குத்  திசை திருப்புவது! இதன் பின்னணியில் இருப்பவர்கள் அரசாங்க அதிகாரிகள்!

அப்படி ஆங்கிலப் பள்ளிகளுக்குப் பிள்ளைகள்  அனுப்பப்படுவதில்லை என்றால் அதற்கு வேறு வகையான தண்டனை உண்டு.  தமிழ்ப்பள்ளிகளுக்கான வசதிகளைக் குறைப்பது.  தண்ணிர் வசதி, கழிப்பறை வசதி இன்னும் பல அத்தியாவசியமான வசதிகளைக் குறைத்து பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளிகளின் பக்கம் திருப்புவது! இந்த நடைமுறையே தொடர்ந்து பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு தமிழ் மொழி மீது - அதன் வளர்ச்சியில் - எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்பது நன்கு புலனாகின்றது. ஆங்கிலக் கல்வியின் மூலம் அரசியல்வாதிகள் பயன் அடைகிறார்கள். அதுவே அரசாங்கப் பள்ளிகளாய் இருந்தால் அரசியல்வாதிகளுக்கு எந்த இலாபமும் இல்லை!

தமிழ் மொழி மீது காழ்ப்புணர்ச்சியோடு தமிழரல்லாதார் பலர் செயல்படுகின்றனர். அவர்கள் அனைவருமே தமிழால் வாழ்பவர்கள். தமிழோடு வாழ்பவர்கள். இருந்தும் தமிழருக்கும், தமிழுக்கும் துரோகம் இழைக்கின்றனர்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் இன்னும் தொடருகிறது!

இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலாவது மாற்றம் ஏற்படும் என நம்புவோம்.  இவரின்  தலமையில் பல மாற்றங்கள் இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழுக்கும் ஒரு விடிவு காலம் ஏற்படும் என நாம் நம்புவோம்!

வாழ்க தமிழனம்! வாழ்க தமிழ்!

No comments:

Post a Comment