Thursday 14 July 2016

எதற்கும் தயார் தானே?


தயார் நிலையில் இருங்கள்! எதற்கும் தயார் என்று மனதிலே ஒரு வைராக்கியத்தைப் பதிய வையுங்கள்.எதனையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் எனக்கு உண்டு என்று உறுதியாக நம்புங்கள்! வான் இடிந்த போதிலும் நான் அசையப் போவதில்லை  என்று சொல்லுங்கள்!

இப்போது நமது நாட்டில் வேலை இல்லாப் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம் புதியவர்ககளை எடுப்பதும் இன்னொரு பக்கம் பழையவர்களை நீக்குவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

பழையவர்களின் அனுபவம், ஆற்றல் என்னவாயிற்று?  அவர்களின் இருபது, முப்பது ஆண்டுகளாக  உழைப்புக்கு ஏதேனும்  மரியாதை கிடைத்ததா? ஒரு மண்ணும் இல்லை!

ஆனாலும் இது முதலாளிகளின் உலகம்! அவர்கள் நினைத்தால் மூன்று மாதச் சம்பளம், ஆறு மாதச் சம்பளம் என்று  கொடுக்காமலேயே  ஒரு நிறுவனத்தை அடைத்துவிட்டுப் போய் விடுவார்கள்! முதலாளிகள் அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள்!  அவர்கள் வைத்தது தான் சட்டம்!

ஆனாலும் அதுவல்ல நாம் பேச வருவது. இது போன்ற நேரங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்கத்  தயராக இருக்கிறீர்களா? நீங்கள் தயராகத்தான் இருக்க வேண்டும். காரணம் உங்கள் கடைசிக் காலம் வரை அவர்கள் உங்களுக்கு வேலைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் ஏன்று எந்தச் சட்டமும் இல்லை! அதுவும் உங்களுக்குத் தெரியும்.

வேலையில் இருக்கும் போதே ஒரு பகுதி நேரத் தொழிலை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். வேலை இல்லாத போது அதுவே உங்களுக்கு முழு நேரத்தொழிலாக .மாறிவிடும். வேலைகளைத் தேடிக்கொண்டிருப்பதை விட இருக்கின்ற வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.  ஓரளவு நடுத்தர வயதைத் தாண்டி விட்டால் யாரும் வேலைக் கொடுக்கமாட்டார்கள்.  அப்படிக் கொடுத்தாலும் மிகக் குறைவானச் சம்பளத்தின் தான் வேலைக் கொடுப்பார்கள். அது உங்களுக்கு ஒரு திருப்திகரமான வேலையாகவும்  அமையாது!

இன்றைய நிலையில் நாம் பலரைப் பார்க்கிறோம். ஏதோ சிறு சிறு வியாபாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களை வெறுமனே பார்த்துக் கொண்டிராமல் நாமும் களத்தில் இறங்க வேண்டியது தான். நமது தகுதிக்கேற்ப அல்லது நமது ஆர்வத்திற்கு ஏற்ப ஒரு தொழிலைத் தேர்ந்து எடுத்து ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாக் காலங்களிலும் யாரோ நமக்கு வேலைக் கொடுப்பார் என்று கனவுக் கண்டு கொண்டிருக்காமல் நாமே நமது பிரச்சனைகள் தீர வழி காணவேண்டும்.

வாழ்க்கைப் பாதையில் எதுவும் நிரந்தரமல்ல. வேலை மட்டும் நிரந்தரம் என்று யார் சொன்னார். அப்படியே நிரந்தரம் என்று நீங்கள் நினைத்தாலும் ஒரு பகுதி நேரமாக ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுவது உங்களாலும் உங்களக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொள்ள ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும். கைத்தொழில் தெரிந்தவராக இருந்தால் அந்தத் தொழிலில் ஈடுபடலாம். வாய்ப்புக்களை நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

எதற்கும் தயார் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுங்கள். எங்கும் போய் நாம் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது! யதார்த்தத்தை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். வருவது வரட்டும் என்று துணிந்து பிரச்சனைகளை எதிர் நோக்குங்கள்! பயப்படுவதாலோ, ஓடி ஒளிவதாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை!  என்ன செய்யலாம், எப்படி செய்யலாம் என்பதை ஊறவுகளோடு ஆழ்ந்து சிந்தித்து வெற்றிகரமாகச் செயல்படுத்துங்கள்

வெற்றி பெற வாழ்த்துகள்! எதற்கும் தயார்! தயார்! தயார்!


No comments:

Post a Comment