Tuesday 12 July 2016

வேலை தேடும் படலம் ஆரம்பமா?


நிறைய மாணவர்கள் கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். .நிறைய புதிய  மாணவர்கள் கல்லுரிகளிலும் சேர்ந்து கொண்டிருக்கின்றனர்.

வெளியாகிய மாணவர்கள் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்து விட்டனர்.  நல்லது தான். ஆனால் நாம் நினைப்பது போல வேலை என்பது கைக்கு எட்டிய தூரத்தில் இல்லை. பல முயற்சிகள், பல போராட்டங்கள்  - அதன் பின்னர் தான் வெற்றி! எல்லாமே எளிதில் கிடைத்த காலம் போய் விட்டது. இப்போது நிலைமைகள் மாறிவிட்டன. உங்களுக்கு என்ன வேண்டுமோ நீங்கள் தான் தேடிப் போக வெண்டும். ஊட்டிவிட ஆளில்லை!

மலாய் இளைஞர்களிடம்   நல்ல மாறுதல்களைப் பார்க்கிறேன்.  எல்லாரும் பட்டதாரிகள் தான். ஆனால் என்ன வேலை கிடைக்கிறதோ முதலில் அதனைப் பற்றிக் கொள்கின்றனர். அதன் பின்னரே அடுத்த முயற்சிகள்.

நம்முடைய இளைஞர்களின் மனப்போக்கு என்பது  வேறாக இருக்கிறது.  தான் படித்த படிப்புக்கான வேலை தான் கிடைக்க வேண்டும். வேறு வேலை  செய்ய நான் தயராக இல்லை. அது வரை நான்  காத்திருக்கிறேன் என்னும் இந்த மனப்போக்கிற்கு்  பெற்றோர்களும்  ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும்! நடைமுறை வாழ்க்கையை  இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

முதலில் கிடைக்கின்ற வேலையைச் செய்ய வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் எல்லாவற்றிலும் நாம் ஏதோ புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளுகிறோம். பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை என்பதெல்லாம் நீங்கள் படித்ததற்கான ஒர் அத்தாட்சி மட்டுமே. உங்களுக்கு வேலை தெரியும் என்பதற்கான அத்தாட்சி அல்ல! உங்களுக்குப் பயிற்சி தேவை; அனுபவம் தேவை. அப்படியே அவர்களுக்கு வேலை கிடைத்தாலும் அந்தப் பட்டப்படிப்புக்கான சம்பளைத்தை எதிர்பார்க்கின்றனர்.  உங்களுக்கு அனுபவம் இல்லாத போது எந்த நிறுவனமும் நீங்கள் விரும்புவது போல் சம்பளத்தைக் கொடுக்கப் போவதில்லை!

நமது நாட்டில் ஒரு பிரபலமான கொரிய நிறுவனம்.  கணினி சம்பந்தமான  ஒரு வேலை. அவர்களுடைய மூன்று கணினி பட்டதாரிகளால் ஒரு நாள் பூராவும் அந்தப் பழுதைச் சரிபண்ண முடியவில்லை. ஒரு தனியார்  நிறுவனத்தின் உதவியை நாடினார்கள்.  அவர்களிடம்  வேலை செய்யும் ஒரு இளைஞனை அனுப்பி வைத்தார்கள்.. ஒரு ஐந்து நிமிட வேலை கூட இல்லை!  வேலை முடிந்தது!  அதற்குத்தான் பயிற்சி, அனுபவம்  தேவை என்று சொல்லுகிறார்கள்.

நீங்கள் என்னத் துறையில் படித்திருந்தாலும் சரி. நீங்கள் சம்பந்தப்படாத ஒரு துறையில் வேலை கிடைத்தாலும் சரி. செய்யுங்கள் அதிலிருந்து முன்னேற முயற்சி செய்யுங்கள். அப்படித்தான் பலர் முன்னேற்ற்ம் அடைந்திருக்கின்றனர்.

ஒரு வேலையும் செய்யாமல் - வேலைக்காகக் காத்துகொண்டிருந்தால்  - நீங்கள் சோம்பறிகள் பட்டியலில் இடம் பெற்று விடுவீர்கள்! எத்தனையோ சிறிய சிறிய நிறுவனங்கள் இருக்கின்றன. பேரங்காடிகள் நாட்டில் ஏகப்பட்டவைகள் இருக்கின்றன.  அங்குச் சாதாரண வேலையில் சேர்ந்தாலும் அங்கும் பல பெரிய பெரிய பதவிகள் இருக்கின்றன என்பதை மறந்து விடாதீர்கள். எல்லாம் உங்கள் முயற்சி தான்! உங்கள் திறமை தான்!

இப்போது வேலை இழந்த பலர் வேலைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். புதிதாகக் கல்லூரிகளிலிருந்து வெளியாகும் மாணவர்களும் வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர். போட்டா போட்டிகள் ஏராளம்! அதனால் வேலைகளைத் தேர்வு செய்கின்ற நிலைமையில் யாரும் இல்லை. நிதானித்து, பொறுமையாகத் தேர்வு செய்ய காலமில்லை!  எந்த வேலை வருகிறதோ அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!


No comments:

Post a Comment