Friday 8 July 2016

காசேதான் கடவுளப்பா...!



"காசேதான் கடவுளப்பா!" என்னும் கவிஞர் வாலியின் பாடலை கொஞ்சம் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பாவம்! பணம் என்ன என்னப்  பாடுபடுத்துதுகிறது, பாருங்கள்!!

பையன் வயதிற்கு வந்துவிட்டான். திருமணம் செய்ய வேண்டும். நாமே போய் தேடி, பெண்ணைப் பார்த்து  - இதற்கே நிறைய செலவு ஆகும் - அப்புறம் கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு செலவு இல்லாமல் திருமணம் நடைபெற வேண்டும்.

பையன் ஒரு பெண்ணைக் காதல் பண்ணுகிறான் என்று செய்தி கிடைத்தது. பரவாயில்லை! பெண்ணும் சரி, குடும்பமும் சரி, தகுதிற்கு ஏற்ற குடும்பம் தான்.  இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பையன் தீவிரமாகத்தான் அந்தப் பெண்ணைக் காதிலிக்கிறான்!  நல்ல செய்தி! அது போதும்!

பெற்றோர் பையனிடம் திருமணத்தைப் பற்றி பேசுகிறார்கள். பெண் பார்த்திருக்கிறோம் என்றார்கள். பையன் எனக்கு எந்தப் பெண்ணும் வேண்டாம். நான் பர்த்துவிட்டேன். அந்தப் பெண்ணைத் தவிர வேறு பெண்ணை நான் கல்யாணம் செய்வதாக இல்லை என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான். அதனைத்தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள்! பெற்றோர் கொஞ்சம் பிகு பண்ணினார்கள்! நாங்கள் பார்த்த பெண்ணை நீ திருமணம் செய்தால் கல்யாணச் செலவு எங்ககளுடையது.. நீ பார்த்த பெண்ணைத்தான் நீ திருமணம் செய்ய வேண்டுமென்றால் நாங்கள் எந்தச் செலவும் செய்ய மாட்டோம். அது உனது பிரச்சனை! எங்களுக்குத்  தெரியாது என்று கை விரித்து விட்டார்கள்!

பையன் பெண்வீட்டாரிடம் பிரச்சனையைச் சொன்னான். பெண் வீட்டாருக்கு பையன் மேல் நல்ல அபிப்பிராயம் இருந்தது.  அதே சமயத்தில் பையனின்  பெற்றோரின் மீதும் நல்ல எண்ணம் இருந்தது.சரி! கல்யாணச் செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்று பெண்வீட்டார் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இரு வீட்டாரின் 'அனுமதியோடு' திருமணம் சிறப்பாக நடைபெற்றது! பையனின் திருமண 'மொய்' பணத்தை பையனின் பெற்றோர்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டனர்! இப்போது பையனின் பெற்றோருடனேயே மருமகளும் வாழ்கிறார்!  எந்தப் பிரச்சனையும் இல்லை. அனைத்தும் சுபம்!

ஆனாலும் பணம் பண்ணுகின்ற கூத்தைப் பாருங்கள். மனிதர்களை எப்படியெல்லாம் பேச வைக்கிறது! எப்படியெல்லாம் செயல்பட வைக்கிறது!

அப்போதே கவிஞர் வாலி பாடினார்: காசேதான் கடவுளப்பா,  அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா!  என்று.

நமக்கும் தான் தெரிகிறது! என்ன செய்ய? நாமும் சேர்ந்து பாட வேண்டியது தான்! எப்படியோ திருமணம் செய்தவர்கள் நல்லபடியாக  வாழ்வது தான் முக்கியம். நாமும் வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment