Thursday 7 July 2016

கேள்வி - பதில் (23)


கேள்வி

அரசியல்வாதிகளையும், உலாமாக்களையும் "வாயை மூடுங்கள்" என்று சமூக ஆர்வலர் மரினா மகாதீர் சாடியிருக்கிறாரே!

பதில்

வரவேற்கப்பட வேண்டிய செய்தி. மரினாவின் துணிச்சலுக்கு நமது பாராட்டுக்கள்.  நம்மைப் போன்ற சாதாரணக் குடிமக்கள் இப்படிப் பேசினால்  உடனே "தேச நிந்தனை" என்று சொல்லி நம்மீது பாய்வார்கள்!

மரினா மகாதீர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மகள். துணிச்சல் மிக்கவர். உண்மையைச் சொல்லத் தயங்காதவர். அவருடைய தந்தையுடேனேயே பல முறை மோதியிருக்கிறார்!

சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாதிகளின் குண்டுவீச்சு சம்பவத்தை மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார், மரினா! இதற்குக் காரணமானவர்கள் ஆளும்  மலாய் அரசியல்வாதிகளும் எதிர்கட்சி (பாஸ்)மலாய் அரசியல்வாதிகளும் தான்!  ஆளும் அரசியல்வாதிகள்  ஐ.எஸ். தீவிரவாதிகளை வைத்தே  மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்!  அதே போல எதிர்கட்சி மலாய் அரசியல்வாதிகள் தீவிரவாதிகளை இஸ்லாமைக் காக்க வந்த புனிதர்கள்  போன்று பேசி வந்தார்கள்!  நமது நாட்டில் எந்தக் காலத்திலும் தீவிரவாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அரசியல்வாதிகளின் தூண்டுதல் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் உலாமாக்கள் மற்ற மதத்தினரை இழிவுபடுத்துவதும் ஐ.எஸ். ஸை ஆதரிப்பது போன்ற நடவடிக்கைகளும் இங்குள்ள மலாய் இளஞர்களை ஊக்குவிப்பதாக அமைந்து விட்டது!  விரோத சக்திகள் அனைத்தும் ஆளும் தரப்பிலிருந்தே உருவாக்கப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

மும்பாயைச்  சேர்ந்த இஸ்லாமிய போதகர் ஸாகிர் நாய்க் போன்றவர்களை நாட்டில் அனுமதிப்பதும் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் அனைத்திலும் மற்ற மதத்தினரைத் தாக்கிப் பேசுவதும் தீவிரவாதத்தை அதிகரிக்கவே செய்யும். சமீபத்தில் வங்காள தேசத்தில் 20 பிணைக்கைதிகளைக் கொலை செய்த இரண்டு பயங்கரவாதிகள் ஸாகிர் நாய்க்கின் சமூக வலைத்தளத்தைப் பின்பற்றுபவர்கள் என்னும் செய்திகளும் வெளியாகி இருக்கின்றன.

தீவிரவாதிகளின் தாக்குதல் என்பது நமது நாட்டுக்குப் புதிது. எப்படிப் பார்த்தாலும் தீவிரவாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது!  மலேசியா ஒரு அமைதியான நாடு. இங்கு தீவிரவாதத்தை வைத்து மக்களின் ஆதரவைப் பெற முடியாது!

மரினா மகாதிர் சொன்ன குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மையே! நாட்டில் அமைதியைக் கொண்டு வருவது அரசாங்கத்தின் கடமை. தீவிரவாதிகளை ஆதரித்து பேசுபவர்களின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, மதவாதிகளாக இருந்தாலும் சரி சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். நாட்டில் தொடர்ந்து அமைதி நிலவ வேண்டும்.

வாழ்க மலேசியா! ஒழிக தீவிரவாதம்!




No comments:

Post a Comment