Tuesday 12 July 2016

களம் இறங்கும் கபாலி!


கபாலி களம் இறங்கும் நாள் அறிவிக்கப்பட்டு விட்டது. வருகிற ஜூலை, 22, வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்து விட்டார்.  இந்த முறை எந்த மாற்றமும் ஏற்படாது என நாமும் நம்புவோம்!

கபாலி களம் இறங்கும் இந்த நேரத்தில் கொஞ்சம் பழைய படங்களில் இந்தக் கபாலியின் நிலையென்ன என்பதைத் திரும்பிப் பார்ப்போம்.

கபாலி என்றாலே ஒரு வில்லன் பாத்திரம். அதிலும் நகைச்சுவை கலந்த ஒரு வில்லன் பாத்திரம். ஒருவகையில் அஞ்சடித்தனமான  வில்லன் மாதிரி!   ஒரளவு அறிமுகமான நடிகர் அந்தப் பாத்திரத்தில் நடிப்பார். ஒரு கோடு போட்ட பனியன், கழுத்தைச் சுற்றி ஒரு துண்டு சுற்றிருப்பார்! இப்படித்தான் அன்றைய கபாலி. அது ஒரு சிறிய வேடமாகத்தான் இருக்கும்! ஆனாலும் அந்தக் கபாலி என்கின்ற பெயரைக் கேட்டவுடனே அவர் ஒரு வில்லன் என்பதாக - ஒரு அபிப்பிராயத்தை - நம்மீது இயக்குனர்கள் திணித்து வைத்திருக்கிறார்கள்!

இப்போது - இந்த ரஜினியின் கபாலி - ஒரு அதிரடியான கபாலி! இத்தனை ஆண்டுகள் கபாலி என்னும் பெயரைத் தங்கள் பிள்ளைகளுக்கு யாரும் வைப்ப தில்லை. இனி மேல் இந்தப் பெயர் பிள்ளைகளுக்கு வைக்கப்படலாம்! வீதியில் கிடந்த கபாலியை ஐந்து நட்சத்திர அளவுக்கு உயர்த்தியிருக்கிறார் ரஜினி! ஆக, திரைப்படமும் அந்த அளவுக்கு உயர்ந்திருக்கும் என நாம் நம்பலாம்!

இந்த நேரத்தில் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய ஆர்வத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பது உண்மையே! ஆனாலும் பொறுமை காக்க!

ரஜினியில் பெயரில் பல நல்ல காரியங்களைச் செய்ய இதுவே தக்க தருணம். ஏழைக் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். ஒரு மாதத்திற்கான  அரிசி புருப்பு வாங்கிக் கொடுத்தோம் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற சில்லறைத்தனமான வேலை! வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுங்கள்; வீடுகளைப் பழுது பார்த்துக் கொடுங்கள்.  பள்ளிப்போகும் ஏழை மாணவர்களுக்குப் போக்குவரத்துச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இன்னும் நிறையவே செய்யலாம். நமது சுற்றுப் புறத்தைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் போதும். என்ன செய்ய வேண்டுமென்று உங்களுக்கே புரியும். ரஜினிக்காக எவ்வளவோ செய்யக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது நல்லதாகவே இருக்கட்டும். அது நீண்ட கால பயனுடையதாக இருக்கட்டும்.

இதுவே ரஜினியின் "கபாலி" வெளியாகின்ற நேரத்தில் நான் ரஜினியின் சார்பில் ரஜினியின் ரசிகர்களுக்கு  வெளியிடுகின்ற செய்தி!

ரஜினியின் "கபாலி" வெற்றி பெற வாழ்த்துகள்!


No comments:

Post a Comment