Friday 15 July 2016

கேள்வி - பதில் (25)



கேள்வி

டாக்டர் மகாதிர் புதிய கட்சி ஆரம்பிப்பார் என்று செய்திகள் வருகின்றனவே! ஆரம்பிப்பாரா?

பதில்

ஆரம்பிப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. எல்லாருமே முன்னாள் துணைப்பிரதமர் அன்வார் இப்ராகிம் புதிய கட்சி ஆரம்பித்தாரே இவரால் முடியாதா என்று தான் பேசி வருகிறார்கள். உண்மையைச் சொன்னால் அன்வாருக்கு  இருந்த கீழ்மட்ட ஆதரவு போல்   டாக்டர் மகாதீருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்!

அன்வார் கீழ்மட்டத்தில் அவர் போட்ட உழைப்பு இப்போது உள்ள எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பது தான் உண்மை. அவருடைய கால்கள் பதியாத பள்ளிவாசல்களே இல்லை. அந்த அளவுக்குச் சமய சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியுள்ளார். இளைஞர் அணித் தலைவர்கள் அனைவரும் அவருடைய நண்பர்கள். பேச்சுத் திறன் மிக்க தலைவர் அவர். அவருக்காக உழைப்பைக் கொடுக்க பலர் இருந்தனர். இப்போது உள்ள எந்தத் தலைவர்களுக்கும் அத்தகையத் தொடர்புகளும்  இல்லை; ஆற்றல் மிக்கவர்களும் இல்லை!

டாக்டர் மகாதிர் யாரை நம்பி கட்சியை ஆரம்பிப்பார்? அவர் கட்சியை ஆரம்பிக்கலாம். ஆனால் கட்சியை வளர்க்க கிழ் இறங்கி வேலை செய்ய ஆள் வேண்டுமே!  அவருடைய ஆதரவாளர்கள் பெரும்பாலும் மேல்மட்டத்திலேயே வளர்ந்துவிட்டவர்கள்!

அவருடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் அம்னோவில் உள்ள தனது ஆதரவாளர்களைப் புதிய கட்சிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது தான். இது நடக்கும் என நான் நம்பவில்லை! டாக்டர் மகாதிர்அம்னோவின் தலைவராக இருந்த போது தனது உறுப்பினர்களுக்குத் தவறான தலைவராக இருந்தவர்; தவறான வழிகாட்டி!  இப்போது உள்ள அவரது ஆதரவாளர்கள் யாரும் கஷ்டப்படத் தயாராக இல்லை!  அரசனை நம்பி அணைத்தவனைக் கைவிடத் தயாராக இல்லை!

இப்போது யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களுக்கே அவர்களது ஆதரவும் இருக்கும்!  எல்லாருமே பதவி வேண்டும்: பணம் வேண்டும்; குத்தகை வேண்டும் என்று கணக்குப் போடுபவர்கள்! அவர்களுக்குத் தீனி போட பிரதமர் தயாராக இருக்கிறார். அப்புறம் ஏன் தங்களது ஆதரவை டாக்டர் பக்கம் திருப்ப வேண்டும்?

எல்லாமே டாக்டர் மகாதிர் தான் தலைவராக இருந்த போது கட்சியில் உள்ளவர்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள்! அப்போது அவர் தலைவராய் இருந்த போது அது சரி என்றால் இப்போதும் இது சரி தானே!

ஊகூம்! டாக்டர் கட்சி ஆரம்பிக்க மாட்டார்! அப்படியே ஆரம்பித்தாலும் அது பெரிய சறுக்கலாகவே அமையும்!

இன்றைய அரசாங்கத்தை நாம் என்ன தான் குறை சொன்னாலும் இன்று, இப்போது பதவியில் இருப்பவர்களுக்குத் தான் மரியாதை அதிகம்; செல்வாக்கு அதிகம்! வெளியே இருந்து கொண்டு கத்தலாம்! காரியத்திற்கு ஆகாது! யார் காதிலும் விழாது!

No comments:

Post a Comment