Tuesday 5 July 2016

ரஜினியின் "கபாலி"........டா....!


ரஜினியின் ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியாகின்ற படங்கள் தான்! அதனை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.

ஆனால் "கபாலி" ரஜினியின் மற்ற அனைத்துப் படங்களையும் மிஞ்சிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  படத்தின் விளம்பரங்களைப் பார்க்கின்ற போது புதுவித யுக்திகள் கையாளப் பட்டிருக்கின்றன. கைதேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனம் எப்படியெல்லாம் தங்களது பொருளை விற்பனைச் செய்ய என்னன்ன யுக்திகளைக் கையாளுமோ அதனையெல்லாம் மிஞ்சி விட்டது கபாலி திரைப்படம்.

படம் இன்னும் வெளியாகாத நிலையில், வெற்றி தோல்வி அறியாத நிலையில் படத்தின் விளம்பரங்களோ நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகிறது! இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது! இன்னும் எப்படியெல்லாம் மாறும் என்றும் புரியவில்லை!

முதலில் பெங்களுருவிலிருந்து சென்னைக்கு பிரத்தியேக விமானப் பயணம் என்றார்கள்! அதன் பின்னர் "சிட்டி பேங்க்" வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கபாலி திரைப்படத்தின் புகைப்படங்களை தனது கிரடிட் கார்டுகளில் வெளியிடப்படுவதாக ஒரு செய்தி! வானில் பறக்கும் ஏர் ஏசியா விமானத்தில் கபாலி விளம்பரங்கள் தூள் கிளப்புகின்றன! இந்திய சினிமாவுக்கு இது புதிது! மேலும் கபாலி வெளியீட்டை முன்னிட்டு சென்னையிலிருந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கு மலிவுக் கட்டணத்தில் ஏர்  ஏசியா விமானப் பயணம்.  புதுச்சேரியில் முதல் நாள் முதல் காட்சி  அரசு அலுவலர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுமாம்! மொழிமாற்றத்தில் எல்லாத் தமிழ்ப்படங்களையும் மிஞ்சிவிட்டது கபாலி. மலாய் மொழி (மலேசியா, சிங்கப்புர், புருணை,  தாய்லாந்து ) மற்றும் இந்திய மொழிகளான தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படுகின்றது.

நமது மலேசிய நாட்டைப் பொறுத்தவரையில் பல மலேசிய வீதிகளில் கபாலி பிரமாண்டமான விளம்பரங்களில், இதுவரை உள்நாட்டுப் படங்களுக்குக் கூட,  இது போன்ற விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது!

இந்த நேரத்தில் ரஜினி ரசிகர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய செய்தி ஒன்று தான். கபாலி திரப்படத்தைப் பாருங்கள். ரசியுங்கள். அவ்வளவு தான்.  விளம்பர பதாகைகளுக்கெல்லாம் பாலாபிஷேகம் செய்யாதீர்கள்! அது ரஜினிக்குக் கேடு விளைவிக்கும்!  ஏற்கனவே நீங்கள் செய்த பாவத்தினால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் அவருக்குத் தொல்லைக் கொடுக்காதீர்கள். அப்படி ஏதாவது நீங்கள் செய்ய வேண்டுமென்றால் அவரது பெயரைச்சொல்லி ஏதாவது ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யுங்கள். நம்மிடையே இருக்கும் ஏழைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்

அதுவே நமது செய்தி. ரஜினியின் ....கபாலி......வெற்றி பெறும்! வெற்றிபெற வேண்டும்! வாழ்த்துகள்!.


1 comment: