Tuesday 19 July 2016

தோல்விகளைச் சுமக்காதீர்கள்!


தோல்விகளைச் சந்திக்காத மனிதர் யாரும் இல்லை! எடுத்த எடுப்பிலேயே நான் வெற்றிபெற்றேன் என்று சொல்லுபவர் யாரும் இன்னும் பிறக்கவில்லை! அதனால் தோல்விகளைப்பற்றிக் கவலைப்படாமல், தடைகளைப்பற்றிச் சோர்ந்து போகாமல், நாம் முன்னேற வழிவகைகளை ஆராய்ந்து நாம் வெற்றிப் பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். தோல்வி தான் நமது முன்னேற்றத்திற்கான முதல் படி. முதல் காலடி.தொடர் முயற்சிகளின் பின்னரே நமது வெற்றிகளை நாம் அமைத்துக்கொள்ள முடியும்.

ஆனால் நாம் இங்கு பேசவருவது அதுவல்ல. தோல்விகள் என்பது வேறு; தோல்விகளைச் சுமப்பது என்பது வேறு!

காலங்காலமாக தோல்விகளைச் சுமப்பவர்கள் நிச்சயமாக எந்தத் துறையிலும் வெற்றிபெற மாட்டார்கள்! தோல்விகளையே பேசுவதும், தோல்விகளையே தங்களது பேச்சின் மூலம் பரப்புவதும், தோல்விகளையே சிந்திப்பதும், தோல்விகளையே பார்ப்பதும், தோல்விகளையே உன்னிப்பதும்....அடாடா!....தோல்விகளைத் தவிர  அவர்களால் எதுவும் பேச முடிவதில்லை! தோல்விகள் தான் அவர்களது வாழ்க்கை! அவர்களாலும் வெற்றிபெற முடியாது; சுற்றி இருப்பவர்களையும் வெற்றிபெற விடமாட்டார்கள்!

அவர்கள் திருத்த முடியாதவர்கள்! எப்படித்தான் அவர்களிடம் பேசினாலும் கடைசியில் அது தோல்வியில் தான் போய் முடியும்!

நண்பர் ஒருவர் நல்ல எடுத்துகாட்டு:  பத்திரிக்கை விற்கும் போது 'யாரு பேப்பர் வாங்குறா? காசு இருந்தாத்தானே வாங்கிறதற்கு?' என்பார்! பத்திரிக்கை விற்பதில் ஒரு தோல்வி! வாடகைக்கார் ஓட்டும்போது: 'எங்க ஆளுங்க வராங்க! காசு இருந்தாத்தானே!' என்பார்! ஓட்டுநராகவும் ஒரு தோல்வி! ஒரு கடை வைத்து வியாபாரம் செய்தார். 'ஒன்னுமே புண்ணியமில்லே! எல்லா விலையையும் ஏத்திட்டானுங்க!  இப்பவிக்கிற விலைக்கு ஆளுங்களால தாங்க முடியலே!'  அதுவும் தோல்வி!

இப்படித் தோல்வியையே பேசி, தோல்வியையே நினைத்து, தோல்வியையே கக்கிக்கொண்டு இருந்தால் அவர் எந்தக் காலத்தில் முன்னேற முடியும்?  எத்தனையோ பேர் இவர் செய்த தொழில்களில் இன்னும் செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்? அவர்கள் வெற்றிபெற முடியும் போது இவரால் ஏன் வெற்றிபெற முடியவில்லை? காரணம் இவர் தோல்விகளையே - உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை - சுமந்து கொண்டு திரிகிறார்!

அந்தத் தோல்விமனப்பான்மையை அவர் மனதிலிருந்து அகற்றும் வரை அவர் முன்னேறக் கூடிய சாத்தியம் இல்லை!

தோல்விகள் வரலாம்; ஆனால் வெற்றிபெற முடியும்! தோல்விகளைச் சுமந்தால் வெற்றி வாய்ப்புப் பறிபோகும்! சுமைகளைச் சுமக்கலாம் ஆனால் தோல்விமனப்பான்மையைச் சுமக்காதீர்கள்!

No comments:

Post a Comment