Monday 25 July 2016

பணம் சம்பாதிக்க மூளை இருந்தா போதும்!


காப்பிக் கடையில் நான்கு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் மற்றவர்களை விட  கொஞ்சம் இள வயதினனாகத் தோன்றினான். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள்.

இன்று அவர்கள் சிறு தொழில்களில் ஈடுபட்டிருக்கலாம். இவர்கள் தான் நாளைய பெரும் தொழில்களின் அதிபர்கள். நாளைய தொழிலதிபர்கள். இந்தச்சிறு துளிகள் தான் பெரும் வெள்ளமாக நாளை மாறும் என்னும் நம்பிக்கை உடையவன் நான்..

அந்த இளஞர்களின் மிக இளைவன் ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.

அவன் சொன்னது "பணம் சம்பாதிக்க மூளை இருந்தா போதும்! வேறு ஒன்றும் வேண்டாம்!" என்பது தான்.

பரவாயில்லையே! நமது இளைஞர்களைப் பற்றி நாம் தான் தப்புக்கணக்கு   போடுகிறோம்! இளைஞர்கள் அவர்கள் கணக்கை அவர்கள் சரியாகத்தான் போடுகிறார்கள்.

இளைஞர்கள் என்றால் சினிமா மட்டும்தான் தெரியும். வேறு ஒன்றும் தெரியாது என்று நாம் தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்போது அவர்களும் பணத்தைப் பற்றிப் பேசுவது ஒரு மாபெரும் முன்னேற்றம்.

மூளையே மூலதனம்! மூளை இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்! மூளைதான் முன்னேற்றம்! மூளை தான் முன்னேற முதற்படி! என்றெல்லாம் எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும் வருகிறோம். நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வெளியாயிருக்கின்றன.

இதோ ஒர் இளைஞன் அந்த வார்த்தைகளைச் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான்! மகிழ்ச்சி தரும் விஷயம் தான். நமக்கு வேறு ஒன்றும் வேண்டாம். நமது இளைஞர்கள் கூடுகின்ற இடங்களில் பொருளாதாரம் பற்றிப் பேசினாலே நமது சமூகம் முன்னேற்றத்தை நோக்கி நகருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த நிலை வரும் என்று நான் சொல்லமாட்டேன் - வந்துவிட்டது என்று தான் சொல்லுவேன்.

அந்தக் குழுவின் வேறு ஒரு இளஞர் "அதிர்ஷ்டம் தேவை" என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவன் அதற்கெல்லாம் மசியவில்லை! "இந்தாப்பா! நாலு நம்பர், அதிர்ஷ்டம். அதெல எனக்கு நம்பிக்கையில்லை! நமக்கு மூளை இருந்தாப் போதும் வேற ஒன்னும் தேவை இல்லை!" அதிலேயே உறுதியாக இருந்தான்!

மேலும் நான் என்ன சொல்லப் போகிறேன். அதேயே தான் நானும்  சொல்லுவேன். படித்தவர்களோ, படிக்காதவர்களோ மூளை தான் முக்கியம்.

ஜப்பான் நாட்டிலிருந்து ஹோண்டா மோட்டார் சைக்கள்களைத் தருவித்தாரே MR.HONDA எனப்படும் பூன் சிவ் (BOON SIEW) அவர் என்ன பெரிய படிப்பு படித்தார்? வெறும் ஹாக்கியன் மொழியை வைத்துக் கொண்டே மலேசியாவையே அதிரடித்தாரே! இந்த ஒரு சான்றே போதும் மூளை இருந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று.

பொருளாதார முன்னேற்றத்திற்கு மொழிக்கெல்லாம் பெரிய முக்கியத்துவமில்லை!  ஏதோ ஒரு மொழியைப் பேசத் தெரிந்தால் போதும். ஏதோ ஒரு மொழியை ஓரளவு படிக்கத்.தெரிந்தால் போதும். உலகத்தையே  ஆளலாம்! கல்வி அறிவு இருந்தால் இன்னும் சிறப்பு. அவ்வளவு தான்!

நான் அந்த இளைஞனுக்கு இருந்த தன்னம்பிக்கையைப் பாராட்டுகிறேன். நமக்கும் அவனைப் போன்ற தன்ன்ம்பிக்கை வர வேண்டும். நம்மைச் சுற்றி நாலு தன்னம்பிக்கையாளர்கள் இருந்தால் போதும். நமது சமுகமே மாறிவிடும். தன்னம்பிக்கை அற்ற பேச்சு,  எந்நேரமும் குறைகளையே சொல்லிக் கொண்டிருப்பது,  குற்றம் காணும் போக்கு என்பது நமது சமுகத்தில் மலிந்து விட்டது.

நமக்குத் தேவை எல்லாம் நாலு நல்ல வார்த்தைகள், நலந்தரும் பேச்சு, தன்னம்பிக்கையூட்டும் பேச்சு  பொருளாதார சிந்தனைகள் இவைகள் வளர வேண்டும்.

இதற்குத் தேவை - மூளை இருந்தால் போது  முன்னுக்கு வந்து விடலாம்!




No comments:

Post a Comment