Monday 18 July 2016

டெல்லியில் அப்துல் கலாம் நினைவிடம்!


இந்தியத் தலைநகர் டெல்லியில்,  முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் அப்துல் கலாம் நினைவாக "அறிவுசார் மையம்" அமைக்கப்படும் என்று  மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்தது போல இம்மாதம் (ஜூலை) 27-ம் தேதி அந்த அறிவுசார் மையம்  திறக்கப்படும் என்று அறிவிப்புக்கள்  வெளியாகி உள்ளன.

மாநில முதல்வரை வாழ்த்துகிறோம்! மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஷ்ராவையும் வாழ்த்துகிறோம்!

அந்த அறிவுசார் மையத்தில் டாக்டர் அப்து கலாம் பயன்படுத்திய பொருட்களும்  அங்கு காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சேர்த்து வைத்த புத்தகங்கள், அவர் எழுதிய புத்தகங்கள், அவருடைய உடைகள், பேனா,  அவருக்கு வழங்கப்பட்ட  பரிசு பொருட்கள் மற்றும் அவருடைய உடமைகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்படும் எனத் தெரிய வருகிறது.

ஆனால் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த ஊரான தமிழகத்தில் வெறும் அறிவிப்புக்களோடு சரி! அனைத்தும் மந்தமான போக்கில் போய்க் கொண்டிருக்கிறன என்று தான் சொல்ல வேண்டும்! நகர வேண்டிய எதுவும் நகரவில்லையாம்!

அவர் பிறந்த ராமேஸ்வரத்தில்  "அறிவுசார் மையம்" அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து அதற்கானத் திட்டங்களையும் அறிவித்தது. அதற்கான நில ஒதுக்கிட்டையும் மாநில அரசு கொடுத்து  விட்டது. . ஆனாலும் இதுவரை மையம்  அமைப்பதற்கான எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை எனச் சொல்லப்படுகின்றது!

வருத்தப்பட வேண்டியதே!  தமிழகம் என்றாலே, தமிழன் என்றாலே நடுவண் அரசும் சரி மாநில அரசும் சரி எதனையும் கண்டு கொள்வதில்லை என்பதனை இதனை  வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம். அப்துல் கலாம் அவர்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர். உலகப் போற்றும் விஞ்ஞானி. ஆனால் அவர் ஒரு தமிழர் என்கிற ஒரே காரணத்தால் யாரும்  கண்டு கொள்ளவில்லை! டெல்லியில் கூட மாநில முதல்வரின் தூண்டுதலினால் - அவர் காட்டிய அவசரத்தால் - இப்போது அவரது நினைவிடம் திறப்பு விழா காண்கிறது.  அந்த மாநில முதல்வருக்கு அப்துல் கலாம் மீது இருக்கின்ற  பற்றும் பாசமும் கூட தமிழக முதல்வருக்கு இல்லை! அது எங்கள் வேலை இல்லை என்கிற மனப்போக்கில் இவர் இருக்கிறார்! எவ்வளவு தான் தமிழன் ஒருவன் உயர்ந்திருந்தாலும் அவனை வரவேற்க தமிழகத்தில் தமிழன் ஆட்சி இல்லை! இது தான் தமிழகத்தின் இன்றைய நிலை! தமிழக முதல்வர் இந்தியப் பிரதமரிடம் பேசத் தகுதியற்றவராக இருக்கிறார்! அந்த அளவுக்கு அவருக்குச் சிக்கல்கள் உள்ளன!

தமிழக,  ராமேஸ்வரத்தில் "அறிவுசார் மையம்" அமைக்கப்படுமா என்பது யாருக்கும் தெரியாது! இப்போதைக்கு டெல்லியில் அமைக்கப்படும் - திறப்பு விழா காணும் -  அறிவுசார் மையத்திற்கு நமது வாழ்த்தினைத் தெரிவிப்போம்.

டாக்டர் அப்துல் கலாமின்  அறிவுசார் மையம் இளஞ்சிறார்களுக்கு மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் பயனுடையதாக அமையும் என நம்புவோம்!

இந்தியர்களால் - அரசியல்வாதிகளைத் தவிர - அனைவராலும்  விரும்பப் பட்ட மனிதர் அப்துல் கலாம் அவர்கள். கறைபடாத மனிதர். நேர்மை, நாணயம் என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.

அவர் புகழ் என்றென்றும் இந்திய மண்ணில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை!




No comments:

Post a Comment