அடாடா! நமது தேசிய பதிவு இலாகாவிற்கு என்னா ஒரு கரிசனை! பாட்டி ஒருவருக்கு குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள். பாட்டிக்கு இப்போது வயது 99...!
பாட்டி குடியுரிமைக்காக 11 முறை விண்ணப்பத்திருக்கிறாராம். இப்போது தான் அவருக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது. பாட்டி எந்த விபரமும் தெரியாதவர் அல்ல. படித்தவர். தற்காலிக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளாராம்.
படித்தவருக்கே இந்த நிலைமை என்றால் படிப்பு வாசனை இல்லாதவர் நிலைமை என்னாவது!
ஆனால் நாம் சொல்ல வருவது அதுவல்ல. இப்படி வயதான ஒருவருக்கு அதுவும் இந்தியர் ஒருவருக்கு தொண்ணுற்றொன்பது வயதில் குடியுரிமை கொடுப்பதை என்னவென்று சொல்லுவது? இப்படி எல்லாம் வயாதானவர்களாகப் பார்த்து பார்த்து உள்துறை அமைச்சு குடியுரிமை கொடுப்பதை பார்க்கும் போது இவர்களிடம் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லை என்றே தோன்றுகிறது.
பாரிசான் அரசாங்கத்தில் என்ன நடந்ததோஅதே தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எப்படி நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தார்களோ இப்போதும் இவர்களும் அதே நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள்!
அரசாங்கம் மாறினாலும் அதிகாரிகள் மாறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றைய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? அதிகாரிகளை மாற்ற வேண்டும். வேலையில் சுறுசுறுப்பு இல்லாதவர்களைக் களையெடுக்க வேண்டும். அல்லது வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை பதவி இறக்கம் செய்ய வேண்டும்.
இப்படி தாமதங்கள் செய்பவர்களின் நோக்கம் என்ன? பக்கத்தான் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். பக்கத்தான் அரசை ஆதரித்தவர்கள் இந்தியர்கள். ஆதரவு கொடுத்தவர்களைப் பழி வாங்க வேண்டும் என்பதே அந்த அதிகாரிகளின் நோக்கம். அவர்கள் அரசாங்கத்தில் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இப்போது நம்மைப் பொறுத்தவரை உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் தான் நமக்கு வில்லனாகத் தோன்றுகிறார்! அவருடைய அமைச்சு தான் குடியுரிமை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும். அவர் பக்கத்தான் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவர். நம்முடைய குறை கூறல்கள் அனைத்தும் அவரைத் தான் போய்ச் சேரும்.
இப்படி 99 வயது பாட்டிக்குக் குடிவுரிமை கொடுப்பது என்பது இந்தியர்களைக் கேலி செய்வதாகவே தோன்றுகிறது. இதை நாம் வரவேற்கவில்லை. வேலை செய்ய இயலாமல் காத்துக் கிடப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் பல நூறாயிரம்.
இவர்களுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.
No comments:
Post a Comment