Saturday 16 February 2019

வாழ்த்துக்கள் சக்கரவர்த்தி சார்!

முன்னாள் தலைமையாசிரியர், வி.சக்கரவர்த்தி, வயது 76, பணி ஓய்வு பெற்றவர்.  அவருடைய ஆணித்தரமான கருத்தை முன் வைத்திருக்கிறார்.

நாம் இத்தனை ஆண்டுகளாக நமக்குச் சொல்லி ஊட்டிவிடப்பட்ட கருத்தை மறுத்திருக்கிறார். 

ஆமாம்!  படிப்பில் நகர்ப்புற மாணவர்கள் திறைமைசாலிகள் கிராமப்புற மாணவர்கள் பலவீனமானவர்கள் என்னும் கருத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேவை எல்லாம் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு.  மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வே முக்கியம் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஆசிரியர் சக்கரவர்த்தி அதனைச் சொல்ல எல்லாத் தகுதியும் உடையவர். 1990 களில் ஸதாப்பாக் பள்ளி ஒன்றிற்கு தலைமையாசிரியராக அனுப்பபட்டவர். அதுவும் குண்டர் கும்பலுக்குப் பேர் போன ஒரு பள்ளிக்குத்  தலைமையாசிரியராக தலைமை ஏற்றவர்! பிற்காலத்தில் அந்தப் பள்ளியை நாட்டில் சிறந்ததொரு பள்ளியாக மாற்றிக் காட்டியவர்!

அவர் என்ன சொல்ல வருகிறார்?  நமக்குச் சொல்லப்பட்ட கருத்தை அவர் மறுத்திருக்கிறார். குறிப்பாக கிராமப்புற மலாய் மாணவர்கள் எந்த விதத்திலும் நகர்ப்புற மாணவர்களை விட தரம் தாழ்ந்தவர்கள் அல்ல.  அவர்கள் நாம் நினைப்பது போல  படிப்பில் மந்தமான மாணவர்களும் அல்ல. ஆசிரியர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு, அரவணைப்பு இருந்தால் அவர்களும் நகர்ப்புற மாணவர்கள் போல சாதித்துக் காட்டுவார்கள். அப்படி அவர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் தனது பள்ளியில் என்கிறார் சக்கரவர்த்தி! 

தோட்டப்புற பள்ளிகளில் பயிலுகின்ற மாணவர்கள் எந்த விதத்தில் தாழ்ந்து  போயிருக்கிறார்கள்?  இன்று உலக ரீதியில் அறிவியில் கண்டுப்பிடிப்புக்களுக்காக பல பரிசுகளை அள்ளிக் குவித்திருக்கிறார்கள்! தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். காரணம் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?

அதே மாணவர்கள் இடை நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும் போது ஏன் தடுமாற்றம் அடைகிறார்கள்? தோல்வி அடைகிறார்கள்? காரணம் அங்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு இல்லை. அரவணைப்பு இல்லை. அரசியலும் சமயமும், இன ரீதியான சிந்தனையும் ஆதிக்கம் செலுத்துகின்றன! 

ஆனாலும் அனைத்தும் மாறி வருகின்றன.  சக்கரவர்த்தி போன்ற ஆசிரியர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்தக் காலத்தைப் போல இன்றும் அர்ப்பணிப்பும், ஆர்வமும் உள்ள ஆசிரியர்களின் வருகை நம்பிக்கைத் தருகிறது.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்புகளுக்காக வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment