Saturday 2 February 2019

வாக்குறுதிகள் போதும்...!

இப்போது எல்லாருமே பேச ஆரம்பித்து விட்டார்கள்! ஆமாம்! போதும்'டா சாமி! வாக்குறுதிகள் போதும்! போதும்! வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! அது தான் இப்போதைய தேவை1

கடைசியாக,  நெகிரி மாநில பெர்சத்து தலைவர் டாக்டர் ரைஸ் யாத்திம் பக்காத்தான் தலைவர்களுக்கு இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார்.

"வெறும் வாக்குறுதிகளை மட்டு அள்ளி வீசுவதால் எந்தப் பயனும் இல்லை. கடந்த கால அரசின் வெற்று வாக்குறுதிகளை நம்பி மக்கள் மோசம் போனார்கள். அதனால் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். நம்மை ஆதரிக்கவும் மாட்டார்கள்!"  என்பதாக அவர் கூறியிருக்கிறார்.

அதில் குறிப்பாக ஒன்றை அவர் நினைவு படுத்தியிருக்கிறார்.  தேர்தலின் போது (மே மாதம் 2018)  தோட்டப்புற மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றுங்கள்"  என்று பக்கத்தான் அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஜ.செ.க. (DAP),  பி.கே.ஆர். கட்சிகளில் உள்ள நமது தலைகள் மறந்து போன ஒன்றை பெர்சத்து தலைவர் ஞாபகப் படுத்தியிருக்கிறார்! 

குறிப்பாக ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். நூறு நாள்களில் முடிப்போம் என்று வாக்களிக்கப்பட்ட நீலநிற அடையாள அட்டை,  குடியுரிமை தீர்த்து வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியர்களைப் பொறுத்தவரை இது மிகவும் தலையாயப் பிரச்சனை.  முவாயிரம் பேருக்குக் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கொடுக்கப்பட்டிருக்கலாம்.  ஆனால் மற்றவர்களுடைய குடியுரிமை எப்போது தீர்க்கப்படும் என்று தெரியவில்லை. அந்த முவாயிரம் பேர் என்பது அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள்.

இப்போது பக்கத்தான் அரசாங்கத்தின்  கொள்கை என்ன? இதுவரை குடியுரிமை கொடுக்கப்படாதவர்கள் குடியுரிமை பெற அறுபது வயது ஆக வேண்டும் என்று பொறுமையோடு காத்திருக்கிறார்களா? அப்படித்தான் நமக்குத் தோன்றுகிறது!  பொறுமையாக  அறுபது வயது வரை காத்திருந்து அதற்குப் பிறகு குடியுரிமை கொடுப்பதால் யாருக்கு  என்ன இலாபம்! அவர்கள் வேலை செய்ய வேண்டமா! அவர்களின் குடும்பங்களைக் கவனிக்க வேண்டாமா!  

அரசாங்கம் என்ன தான் நினைக்கிறது? பாரிசான் அரசாங்கம் தான் இழுத்தடித்தது தான் என்றால் பக்கத்தான் அரசாங்கமும் அதே தான் செய்து கொண்டிருக்கிறது! நூறு நாள் கனவு எல்லாம் தகர்ந்து விட்டது!

அதைத் தான் ரைஸ் யாத்திம் நினைவுறுத்தியிருக்கிறார். வாக்குறுதிகள் போதும்! தோட்டப்புற மக்கள் என்று அவர் குறிப்பிட்டாலும் அது இந்தியர்களைத் தான் குறிக்கும்! 

இனி புதிதாக எந்த  வாக்குறுதிகளும் வேண்டாம்.  தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளே போதும்! அவைகளை நிறைவேற்றுங்கள், அது போதும்!

கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள்!

No comments:

Post a Comment