பெர்னாமா இணையதள செய்தி பிரிவில் தமிழுக்கும் இடம் வேண்டும் என்பதாக ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. ஆங்கிலம், மலாய், சீனம், அரபு அத்தோடு ஸ்பெயின் மொழியிலும் அந்தச் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இதில் என்ன அதிசயம் என்றால் உள்நாட்டில் தமிழ் என்கிற ஒரு மொழி இருக்கிறது என்பதை பெர்னாமா அறிந்திராதது நமக்கு வியப்பை அளிக்கிறது. அதாவது பெர்னாமா அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை! ஒரு காரணத்தை நாம் அறிந்திருக்கிறோம். இந்த அதிகாரிகள் வெளி நாடுகளில் படித்தவர்களாக இருக்கலாம். அதனால் உள்நாட்டில் எத்தனை மொழிகள் இருக்கின்றன என்பதை அவர்கள் அறியவில்லை! வெளிநாடுகள் என்று சொல்லுவதற்குக் காரணம் ஸ்பெயின் மொழியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதனால் மட்டுமே!
ஒரு செய்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். முன்பு பாரிசான் அரசாங்கம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அப்போது வாயில்லா ஜீவன்கள் நம்மைப் பிரதிநிதித்துக் கொண்டிருக்கின்றன என்பதாக நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்!. அதில் பல ஜீவன்கள் படிக்காத அரைகுறைகள். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. எல்லாம் படித்த மேதைகள். இப்போது என்ன கேடு வந்தது?
ஒன்று புரியவில்லை. அன்று பாரிசான் அரசாங்கம். இந்தியர்களைப் பொறுத்தவரை எந்த ஒரு நன்மையையும் கொண்டு வரவில்லை. அதில் மொழி புறக்கணிப்பும் ஒன்று. அதனால் ஏற்பட்ட விளைவு தான் அரசியல் மாற்றம். ஆனாலும் இப்போதும் அதே பிரச்சனை.
முன்னாளில் என்ன நடந்ததோ இபோதும் அதே நடக்கிறது! அதே வேண்டுகோள். பக்கத்தான் அரசாங்கத்திலும் அதே கூக்குரல். சும்மா இருக்கும் இயக்கங்களும் "தமிழுக்கு இடம் கொடுங்கள்" என்று அறிக்கை விட ஆராம்பித்து விட்டார்கள். முன்பும் இதே தான் அவர்கள் பணியாக இருந்தது. இப்போதும் அதே தான் அவர்கள் பணியாக இருக்கிறது!
பெர்னாமா செய்தித்தளம் தொடர்புத் துறை அமைச்சின் கீழ் வருகின்றது. அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ. இப்போது பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியிடம் இந்தப் பிரச்சனை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனாலென்ன எங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்குக் கொண்டு செல்வது தவறில்லை.
வேதமூர்த்தி அவர்கள் கோபிந்த் சிங்கிடம் நேரடி பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். இந்த ஒரு பிரச்சனை அல்ல. இனி அவருடைய அமைச்சிலிருந்து வெளியாகின்ற அது இணயத்தளமோ அல்லது வேறு எதுவோ அங்குத் தமிழ் வேண்டும் என்பதாக ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு நிரந்தரத் தீர்வு தான் முக்கியமே தவிர எப்போதும் நாங்கள் "இது வேண்டும்! அது வேண்டும்!" என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்க முடியாது!
இன்றைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது பக்கத்தான் அரசாங்கத்திற்கு நல்லதல்ல!
தீர்வு உங்கள் கையில்!
No comments:
Post a Comment