உணவில் போதைப் பொருள் என்பதாக ஒரு செய்தி!
என்னன்னவோ செய்திகள் எல்லாம் வந்தன. எப்படியோ நாம் பொறுத்துக் கொண்டோம். ஆனால் இது சாதாரணமான செய்தி அல்ல. மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகின்ற ஒரு செய்தி.
இதிலும் ஒரு அதிசயம். மூன்று சமையல் பணியாளர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்களாம்! . அப்படியானால் உணவகத்தை நடத்தும் நடத்துனர் இது பற்றி ஒன்றும் அறியாதவரா?
அந்தப் பணியாளர்களுக்கு உணவகத்தின் மீது அப்படி என்ன கரிசனை? இப்படிப் போதைப் பொருளைக் கலந்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு என்ன தலையெழுத்தா?
சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது உணவகங்களில் மேலேயே நமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. எந்த உணவகங்களின் கூட்டம் அதிகமாக நிரம்பி வழிகிறதோ குறிப்பாக அந்த உணவகங்களின் 'தரத்தை'ப் பற்றி ஐயம் எழத்தான் செய்கிறது! அது இயற்கை தானே!
ஓர் இந்திய நண்பரின் உணவகம் எந்த நேரமும் நிரம்பி வழிகிறது. அது நல்லது தான். அது அவர்களின் அயரா உழைப்பைக் காட்டுகிறதே தவிர வேறு எந்தக் காரணமும் எழவில்லை. வெறும் உழைப்பு மட்டும் அல்ல, உணவகத்தின் சுத்தம், தரம், பணியாளர்களின் பண்பு, தூய்மை எல்லாவற்றுக்கும் மேலாக உணவின் சுவை - இவை அனைத்துமே உணவகங்களின் உயர்வுக்குக் காரணமாக அமைகிறதே தவிர வேறு எந்தக் காரணங்களும் இல்லை.
ஆனால் சுவைக்கு இப்படியும் ஒரு வழியுண்டு என்பதை இப்போது அனைவருக்கும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டுவிட்டதே என்பதை அறியும் போது கொஞ்சம் வேதனை தான். இனி எந்த உணவகத்திற்குப் போனாலும் அந்த சந்தேகம் வரத்தான் செய்யும். அதுவும் கூட்டம் அதிகமாக இருந்தால் சந்தேகமும் அதிகமாகவே இருக்கும்!
சரி, அதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும். உணவில் போதைப் பொருளைக் கலந்த அந்த உணவகத்திற்கு அல்லது அந்தப் பணியாளர்களுக்கு என்ன தான் நடக்கப் போகிறது என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி! போதைப் பொருள் என்றால் அது மரண தண்டனை வரைப் போகும். பணத்தைக் கொடுத்து உடல் நலனையும் கெடுத்து வாடிக்கையாளர்களை இப்படி மரண பாதைக்குக் கொண்டு செல்லும் நபர்களுக்கு என்ன தண்டனை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த விஷயத்தில் பணியாளர்களுக்குச் சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். இன்று உணவகங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். அவர்களைக் குற்றவாளி கூண்டிலே நிறுத்திவிட்டு இங்குள்ளவர்கள் தப்பிக்க நினைத்தால் அவர்களைத் தப்ப விடக் கூடாது என்பதும் முக்கியம்.
போதைப் பொருள் என்பது விளையாட்டுககு உரிய விஷயம் அல்ல. உரிய தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். நீதி நிலைநிறுத்தப்படும் என நம்புவோம்!
No comments:
Post a Comment