Saturday 9 February 2019

பாஸ் கட்சியும் இப்படித் தானா..!

நம்ப முடியவில்லை!  பாஸ் கட்சியும் இப்படித் தானா  என்று யோசிக்க வேண்டியுள்ளது.

"பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்"  என்று அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகின்ற பழமொழி. எல்லாரும் அப்படியெல்லாம் வாய் பிளப்பதில்லை.  விதிவிலக்குகள் உண்டு.

விதிவிலக்கு என்று நாம் நினைத்த பாஸ் கட்சி இப்போது ஊழலில் சிக்கிக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் அப்படி இல்லை என்று அவர்கள் மார்தட்டினாலும் அவர்களுக்கும்  உள்ளுற  நடுக்கம் இருக்கத்தான் செய்யும்!

பாஸ் கட்சி எந்தக் காலத்திலும் இந்த அளவுக்கு  பேரும்  புகழும்  கிடைக்கவில்லை!  முன்னாள்  தலைவர் நிக் அப்துல் அஸிஸ் தலைவராக இருந்த காலத்தில் இது போன்ற செய்திகள் எல்லாம் நம் காதில் விழ வாய்ப்பு இருந்ததில்லை. ஊழல் என்பது அவர் காலத்தில் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட ஒன்று.

பாஸ் கட்சியின் தலைவர்களால் ஹராம் என்று சொல்லப்பட்டது அன்று. ஆனால் இன்றோ அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. இப்போது உள்ள தலைவர்களால் ஹே! ஹே1 என்று ஹராமுக்கு ஹாய்! சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! 

பாஸ் கட்சி எப்படிப் பார்க்கப்பட்டது?  ஊழல் இல்லாத கட்சி. தனது கட்சியோடு இஸ்லாமையும் சேர்த்துக் கொண்டு நாங்கள் தூய்மையானவர்கள் என்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட கட்சி. ஓரளவு அவர்களிடம்  அந்த நேர்மை இருந்தது. நல்லவர்கள் என்கிற பெயரை எடுத்திருந்தார்கள்.  கிளந்தானைப் பொறுத்தவரை இந்தியர்களுக்கோ, இந்துக்களுக்கோ, கிறிஸ்துவர்களுக்கோ  அவர்கள் மூலம் எந்தத் தீங்கும்  நேர்ந்ததில்லை. எந்த மதத்தினரையும் அவர்கள் எதிரிகளாகப் பார்க்கவில்லை. 

ஆனால் இவைகள் எல்லாம் இப்போது மாறிவிட்டன.  எப்போது அவர்கள் அம்னோ கட்சியுடன் ஒட்டு உறவு கொண்டாட ஆரம்பித்தார்களோ அப்போதே அவர்கள் மீது விழுந்தது சனிப் பார்வை! 

முன்பு அம்னோ மீது மட்டும் தான் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தன.  ஆட்சியில் அவர்கள் அமர்ந்திருந்ததால் அனைத்தும் மறைக்கப்பட்டன.  இப்போது அவைகளெல்லாம் ஒன்றொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இந்த  நிலையில் அம்னோ,  பாஸ்  கட்சியினரையும்  தனது ஊழல்   வலைக்குள்  இழுத்துக் கொண்டு விட்டது என்று சொல்லலாம்! ஆக, மலாய்க்காரர்களுக்காக நாங்கள்  போராடுகிறோம். இஸ்லாத்திற்காக நாங்கள்  போராடுகிறோம்  என்று  பேசுவதைத்  தவிர  இந்த இரு கட்சிகளுக்குமே  வேறு வழி இருப்பதாகத்  தெரியவில்லை! அதனால்  தான்  இப்போது  முன்பை விட கொஞ்சம் அதிகமான சத்தம் அவர்களிடமிருந்து  கேட்கிறது!  ஊழல் புரிபவனுக்கு அந்தச் சத்தம் தேவையாயிருக்கிறது!

என்ன செய்வது? பணம் பாதாளம் வரையும் பாயும் என்பார்கள்! இப்போது அதனை பாஸ் கட்சியினர மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

நீங்களும் இப்படித்தானா? என்று கேட்பதைத் தவிர வேறு என்ன சொல்ல!

No comments:

Post a Comment