Thursday 7 February 2019

சிறப்புக் கழிவை வரவேற்கிறோம்..!

 சுகாதார துணை அமைச்சர் டாக்டர் வீ  பூன் சாய் அவர்களின் அறிவிப்பை மனப்பூர்வாக  வரவேற்கிறோம்.

குறிப்பாக அரசாங்க மருத்துவமனையில் புற்று நோயால் துன்புறும் நோயாளிகளுக்கு அரசாங்கம் சிறப்புக் கழிவுகளைக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். அதுவும் 95 (தொண்ணூற்று ஐந்து) விழுக்காடு அவர்களின் செலவுகளை அரசாங்க ஏற்றுக் கொள்ளுகிறது என்பது  சாதாரண விஷயம் அல்ல.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ செய்த பரிந்துரையின் பேரிலேயே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவரை வாழ்த்துகிறோம்.  இன்றைய நிலையில் பெரும்பாலான புற்று நோயால் வாடும் நோயாளிகள் அரசாங்க மருத்துவமனைகளை   நம்பித்தான் இருக்கின்றனர்.

புற்று நோய் நமது நாட்டில் இரண்டாவது பெரிய ஆட்கொல்லியாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.  புற்று நோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போது அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. பெரும்பாலும் மிகவும் முற்றிய நிலையிலேயே நோயாளிகளுக்குத் தெரிய வருகின்றது என்பது வருத்தத்திற்குறிய விஷயம் தான்.

இந்த நேரத்தில் வேறு ஒரு மிக அபாயகரமான நோயையும் குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகிறேன். 

இருதய நோய் நமது நாட்டின் அனைத்து நோய்களையும் பின் தள்ளிவிட்டு முதலாவது இடத்தில் இருப்பதாக அண்மையில் வெளியான செய்தி ஒன்று கூறுகின்றது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாவதை நாம் பார்க்கிறோம். சாதாரண நிலையில் இருந்தால் ஏதோ மாத்திரை, மருந்துகளைக் கொண்டு சமாளிக்கலாம். ஆனால் அறுவை சிகிச்சை என்கிற போது அதற்கான செலவுகளை நடுத்தர குடும்பங்களால் கூட சமாளிக்க இயலாது என்பதை நடைமுறையில் நாம் பார்க்கிறோம். அதனால் தான் உதவி செய்யுங்கள் என்பதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன.

இதனையும் சுகாதார அமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும்  என்று  கேட்டுக் கொள்ளுகிறோம். இன்றைய  நிலையில் இருதய அறுவை சிகிச்சை என்பது பணக்காரர்களால் மட்டுமே செய்யக்  கூடிய  ஒன்றாகவே   தோன்றுகிறது. பொது மக்களுக்கும்  அனைத்து  நன்மைகளும்  போய்ச்  சேர  வேண்டும் என்பதே  நமது  வேண்டுகோள்.  அது அரசாங்கத்தின்  கடமையும்  கூட.  ஒரு சாரார் அனைத்து நன்மைகளையும் பெறுவதும் இன்னொரு  சாரார் பணம் இல்லாமல் சிரமப்படுவதும் - இது போன்ற  ஏற்றத் தாழ்வுகள் இருப்பது நல்லதல்ல.

புற்று நோயாளிகளுக்கு  -  தக்க கழிவுகளைக் கொடுத்து அவர்களின் சிரமத்தைக் குறைப்பது வரவேற்கக் கூடிய ஒன்று.  அதற்காக அரசாங்கத்தைப் பாராட்டுகிறோம்!

No comments:

Post a Comment