Wednesday 13 February 2019

மீண்டும் சர்ச்சையில் பெர்சத்து

மீண்டும்  பிரதமர் மகாதிர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டியிருக்கிறார்!  ஆனால் அது பற்றி அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை! வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை!  தனக்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதனைச் செய்ய அவர் தயங்குவதில்லை! 

அம்னோவைச் சேர்ந்த ஏழு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது வலைக்குள் கொண்டு வந்திருக்கிறார். அதாவது பெர்சத்து கட்சிக்குள் கொண்டு வந்திருக்கிறார். அது சரியா என்று நாம் கேட்டால் அது சரிதான் என்று தான் அவர் பதில் சொல்லுவார்.  அவருடைய பதில்  அப்படித்தான் அமையும்.

பொதுவாக டாக்டர் மகாதிர் எதனைச் செய்தாலும் அங்கு மலாய்க்காரர் நலன் என்று ஒன்று ஒளிந்திருக்கும்! இங்கு அம்னோ  நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வருவதன் மூலம் அவர் அம்னோவைப் பலவீனமடையச் செய்கிறார் என்பது ஒன்று. அதன் மூலம் அவர்களின் தொகுதியைச் சேர்ந்த அம்னோ உறுப்பினர்களைப் பெர்சத்துவின் பக்கம் இழுக்கலாம். அம்னோவை முழுவதுமாக அழித்துவிட்டு பெர்சத்துவை அனைத்துத் தொகுதியிலும் மலாய்க்கரர்களின் ஆதரவு கட்சியாக நிலை நிறுத்தலாம். 

இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது பக்கத்தான் அரசாங்கம் எந்தவொரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்க்க/போர்க்குரல் எழுப்ப அம்னோவைச் சேர்ந்தவர்கள் அடவாடித்தனம் செய்ய எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறார்கள். அதனால் அம்னோவைப் பலவீனப்படுத்துவது என்பது தான் டாக்டர் மகாதிருக்கு முதல் வேலை. அதன் காரணமாகத்தான் இந்தக் கடத்தல் வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என நம்பலாம்!

ஆனாலும் இந்தக் கடத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த அளவுக்கு பக்கத்தான் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள் எனும் கேள்வியும் எழத்தான் செய்கிறது. அம்னோ என்றாலே திருடர்கள் என மக்கள் மத்தியிலே ஓர் அபிப்பிராயம் ஏற்பட்டுவிட்டது! இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிய திருடர்களாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது கை நீட்டியிருப்பார்கள் என்பது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!

சர்ச்சை என்பது மகாதிருக்குப் புதிதல்ல! ஆனால் அந்த சர்ச்சையின் மூலம் நாட்டுக்கு நல்லது நடந்தால் நாம் மகிழ்வோம்! நல்லது நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment