உலகத் திருக்குறள் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசும் போது பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி நல்லதொரு கருத்தினைக் கூறியிருக்கிறார். தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் எனச் சொல்லலாம்.
"நாம் அறுபது ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம். நான் இனி ஏமாற விடமாட்டேன்." என்பதாக அவர் கூறியிப்பது நமது இந்திய சமுதாயத்திற்குப் புதிய தெம்பைத் தருகிறது!
புதிய அரசு பதவி ஏற்ற போது ஒரு சில இந்திய அரசியல்வாதிகள் "எங்களால் எல்லாம் முடியும்!" என்னும் தோரணையில் பேசிய போது நமக்கும் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது. நம்பிக்கைக் கூட்டணி சாதனை புரியும் என்றெல்லாம் நம்பினோம். அதே அரசியல்வாதிகள் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றனர்! இப்போது நமக்கும் ஒன்று புரிகிறது. அவர்களுக்கும் எஜமானர்கள் இருக்கின்றனர். அவர்களை மீற முடியாது என்று!
ஆனால் ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ளுகிறோம். புதிய அரசாங்கம் உடனடியாக எந்த மாற்றங்களையும் கொண்டு வந்துவிடமுடியாது. அப்படிக் கொண்டு வந்தால் ஒரு சாராரின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும்.
பினாங்கு மாநிலத்திலேயே சில பிரச்சனைகள் தீர்க்க முடியாத நிலையில் இருக்கின்றன என்பதை பத்திரிக்கை வாயிலாக அறிகிறோம். குறிப்பாக இந்தியர்களின் நிலப் பிரச்சனை. அதே போல தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனை. நிலப் பிரச்சனை என்பது நீண்ட காலப் பிரச்சனை. அதனைக் கலைவது என்பது பல சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும். தமிழ்ப்பள்ளிகளின் பிரச்சனை என்பது இப்போது தான் நடப்பு அரசாங்கப் பார்வையில் இருப்பதால் இனி மேல் அதற்கு நல்ல காலம் பிறக்கும்.
புதிய அரசாங்கத்தின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளுகிறோம். ஆனால் ஒரு சில பிரச்சனைகள் நமது கையாலாகத்தனத்தை காட்டுகின்றன. இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனை என்பது நூறு நாள்களில் தீர்க்க வேண்டிய பிரச்சனை. இப்படி இழுத்தடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது! அடுத்து உயர் கல்வி நிலையங்களில் நமது மாணவர்களின் நிலை என்ன என்பது உறுதியாகத் தெரியவில்லை. அரசாங்க வேலை வாய்ப்புக்கள், தனியா துறைகளில் வேலை வாய்ப்புக்கள், வங்கிகளில் வேலை வாய்ப்புக்கள் என்று இன்னும் பிரச்சனைகள் தொடரத்தான் செய்கின்றன.
பேராசிரியர் இராமசாமி சொன்னது போல நாங்கள் அரசாங்கத்தை நம்புகிறோம். அவர்களால் இன்னும் முழுமையாக இயங்க முடியவில்லை என்பதை உணருகிறோம். அதனாலேயே நாங்கள் காத்திருக்கிறோம்.
ஆனால் அந்த அறுபது ஆண்டு கால ஏமாற்று வேலையை இனி நடக்க விடமாட்டோம் என்பதையும் நாங்களும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்!
இனி ஏமாறுவதாக இல்லை!
No comments:
Post a Comment