Tuesday 5 February 2019

சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்.!

மலேசியர்  அனைவருக்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு, தீபாவளி, ஹரிராயா, சீனப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ்  - எதுவாக இருந்தாலும் சரி மலேசியர் அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் குதூகலம், கொண்டாட்டம் தான்.

விடுமுறை காலங்களில் ஊரைச் சுற்றிப் பார்ப்பது என்பது நம்மிடையே ஒரு கலாச்சாரமாகி விட்டது. இப்போதெல்லாம்  பலர்  வெளி நாடுகளுக்கும்  கூட சென்று வருகிறோம்.

அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே நமது கலாச்சாரமாக இருக்கட்டும். 

சீனர்களைப் பற்றி பேசும் போதே நமக்கு வியப்பு ஏற்படுகிறது.அதெப்படி உலகெங்கும் அவர்களால்  வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்க முடிகிறது? எந்த நாடுகளை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் வர்த்தக ஆதிக்கம் குறைந்த பாடில்லை. இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சீனாவுக்கு வெளியே இருக்கும் இந்த சீனர்களின் வர்த்தக ஆதிக்கம் சீனாவுக்கு இன்னும் கூடுதல் பலம்!

நம் நாட்டிலும் அதே நிலைமை தான்.  அவர்களை யார் என்ன செய்ய முடியும்?  பணத்தை வைத்தே யாரையும் வாங்கக் கூடிய சக்தி அவர்களிடம் இருக்கிறது!

இந்தியர்கள் எப்போது இந்த நாட்டில் அடி எடுத்து வைத்தார்களோ ஏறக்குறைய  அந்தக் காலக் கட்டத்தில் தான் அவர்களும் காலடி எடுத்து வைத்தார்கள். ஆனால் இரு இனங்களுக்கிடையே உள்ள பொருளாதார பலம் என்பது கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை!

நாம் முன்னேற உலகெங்கும் சுற்றி வர வேண்டாம். நமது அக்கம் பக்கம் உள்ள சீன நண்பர்களைக் கொஞ்சம்  கவனித்தாலே போதும். அவர்களுடைய வாழ்க்கை முறை, பிள்ளைகளின் கல்விக்கு அவர்கள் தரும் முக்கியத்துவம் - இவைகளெல்லாம் நமக்கு நல்ல பாடம்.

இந்த சீனப் புத்தாண்டில் நாம் சீனர்களைப் படிப்போம்.  அவர்களின் முன்னேற்றத்தைப் படிப்போம். அவர்களிடமிருந்து படிக்க  வேண்டியவை நிறையவே உண்டு. நமது முன்னேற்றத்திற்கு அவர்களின் வாழ்க்கை முறையைப் பயன்படுத்திக் கொள்வோம்.

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment