வெளியுறவு துணையமைச்சர் டத்தோ மர்சூக்கி யாஹ்யா சிக்கலில் மாட்டியுள்ளார்.
அவருடைய கல்வித் தகுதி பற்றி இப்போது கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அவர் முறையான சான்றிதழை பெற்றிருக்கவில்லை என்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக அம்னோ, பாஸ் தரப்பினர் இன்னும் அதிகமாகக் குற்றம் சாட்டுகின்றனர். இது அவர்களுக்கு அரசியல் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை!
மர்சூக்கி அசியலுக்கு வருமுன் வர்த்தகத் துறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வேலை செய்து பிழைக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தில் இருந்திருந்தால் அவர் ஏதோ ஒரு மாரா கல்லூரியில் சேர்ந்து ஏதோ ஒரு பட்டத்தை பெற்று பட்டதாரியாக ஆகி இருக்கலாம். அப்படி ஒரு நிர்ப்பந்தம் இல்லாத நிலையில் அவர் தனது தேவைக்கு எது தேவையோ அதனைத் தொலைதூரக் கல்வியின் மூலம் அந்தப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். அது அங்கீகரிக்கப்படாத கல்வி என்பதெல்லாம் தேவையில்லாதது. அவருக்கு எது தேவையோ அது அவருக்குப் போதும். அவ்வளவு தான்!
இன்று நாட்டில் பலர் இது போன்ற கல்விச் சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். தங்களின் சுய திருப்திக்கா, தங்களது அறிவு வளர்சிக்காக பலவிதமான பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். குறிப்பாக தமிழாசிரியர்கள் பலர் தமிழில் புலவர் பட்டம், ,முனைவர் பட்டம் கூட பெற்றிருக்கின்றனர். ஏன், அவர்கள் அரசியலுக்கு வந்தால் என்ன கெட்டுப் போய்விடும்? உண்மையைச் சொன்னால் அவர்கள் ஏதோ ஒரு துறையில் தங்களது அறிவை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அது எந்த வகையிலும் நாட்டுக்குக் கெடுதலை விளைவிக்கப் போவதில்லை.
முன்பு கூட துணைக் கல்வி அமைச்சர் கமலநாதனைப் பற்றி - அவருடைய கல்வி தகுதிப் பற்றி பற்பல கேள்விகள் எழுந்தன.ஆனாலும் பாரிசான் அரசாங்கத்தில் அது மூடி மறைக்கப்பட்டது. இப்போது அனைத்தும் வெளிப்படையாக இருப்பதால் இந்த விவகாரத்தைப் பற்றி அதிகமாகப் பேசுகிறோம்.
நாட்டை வழி நடுத்துபவர்களுக்கு நல்ல கல்வி தகுதி இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் அதைவிட நாணயம, நேர்மை மிக மிக முக்கியம். தொண்டுசெய்வது அதைவிட முக்கியம்.
முன்னாள் பிரதமர் நஜிப் இங்கிலாந்தில் படித்தவர். பொருளாதாரம் படித்தவர். அவர் படித்த கல்வி அவருக்கே உதவவில்லை! பின்னே நாட்டுக்கு எப்படி உதவும்?
நாட்டுக்கு நல்லது நடந்தால் அது சரி தான்!
No comments:
Post a Comment