தமிழ் நேசன் நாளிதழ் மீண்டும் வெளி வர வேண்டும் என்பதாக ஒரு சிலர் குரல் எழுப்புகின்றனர்.
ஒரு தமிழ் பத்திரிக்கை நிறுத்தப்படுவதை தமிழ் மீது பற்றுள்ளவன் எவனும் விரும்பமாட்டான். அது அவனது உயிர். தமிழ் எங்கள் உயிர். தமிழ்ப் பத்திரிக்கையும் எங்களது உயிர். அப்படி யோசிப்பவன் தான் தமிழன்.
தமிழ் நேசன் ஒர் நீண்ட, நெடிய சரித்திரத்தை உடையது. இந்திய சுதந்திரப் போராட்டம், மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் என்று நீண்ட அரசியல் பின்னணியை உடைய பத்திரிக்கை.
அதன் கடைசி காலம் முற்றிலுமாக மலேசிய ஆளும் கட்சியைச் சார்ந்துவிட்ட ஒரு பத்திரிக்கை. அதனை நாம் குறை சொல்ல முடியாது. அது அவர்களின் வசதி. ஆளுங்கட்சி பத்திரிக்கை என்பதால் அது அரசாங்கத்தின் உதவி பெற்ற பத்திரிக்கையாக வலம் வந்து கொண்டிருந்தது.
ஏற்கனவே கென்னெத் ஈஸ்வரன் ஒரு தமிழ் நாளிதழை நடத்தி வந்தார் என்பதை நாம் அறிவோம். அதுவும் குறைவான விலையில்! அது அரசாங்கத்தின் குரலாக வெளி வந்து கொண்டிருந்தது. பணம் நிறைய கொட்டப்பட்டது. ஆனாலும் வாசகர்களை அவர்களால் கவர முடியவில்லை.
இதற்கெல்லாம் என்ன காரணம்? மக்கள் அரசியலைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் எது உண்மை எது பொய் என்பதை மக்கள் அறிந்திருக்கிறார்கள். பொய்யான விளம்பரங்களினால் பொய் உண்மையாகி விட முடியாது. மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது!
தமிழ் நேசனின் வாசகர் வட்டம் அதிகமில்லை என்றாலும் பாரிசான் அரசாங்கத்தின் ஆதரவினால் அது தொடர்ந்து பேர் போட்டுக் கொண்டிருந்தது. அரசாங்க மாற்றத்தினால் அந்த ஆதரவும் கை விட்டுப் போனதால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை!
நிச்சயமாக கை மாறுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் இழந்து விட்டார்கள்! மக்களிடையே அறவே செல்வாக்கு இல்லாத ஒரு பத்திரிக்கையை யாரும் வாங்குவதற்குத் தயாராக இல்லை என்பது உண்மை. அதன் பெயர் அந்த அளவுக்குக் கெடுக்கப்பட்டு விட்டது!
தமிழ் நேசன் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு இல்லை. அதனை வாங்கி பழைய நிலைக்குக் கொண்டு வர பணத்தைக் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டும்! அப்படியும் அதன் பாதிப்பிலிருந்து அது மீளுமா என்பது ஐயமே!
வராது..........!
No comments:
Post a Comment