மனிதவள அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனது அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்திறன் பயிற்சி நிலையங்களில் போதுமான இந்திய மாணவர்கள் விண்ணப்பம் செய்வதில்லை. அப்படி செய்து இடம் கிடைத்தாலும் அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை பயிற்சியில் நீடிப்பதில்லை. இடையிலேயே புட்டுக் கொள்கின்றனர்! கடைசியாக அவர்கள் தனியார் கல்விக்கூடங்களின் பயில விரும்புகின்றனர்.
"பிரேக்டிக்கலுக்" காக வரும் ஒரு சிலரிடம் பேசியிருக்கிறேன். கடைசியாக வந்த ஒரு மாணவியிடம் கேட்ட போது அவர் சொன்னது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது.
அந்த மாணவி சொன்னது "நான் கல்லூரியில் சேரும் போது என்னோடு சேர்த்து சுமார் 15 இந்திய மாணவர்கள் இருந்தோம். இப்போது நான் பயிற்சியை முடித்து வெளியாகும் போது 3 பேர்கள் மீதம் இருக்கிறோம்! வந்தவர்களில் ஒரு சிலர் வந்த சில நாட்களிலேயே போய்விட்டனர்! இன்னும் சிலர் ஐந்து, ஆறு மாதங்கள் கழித்துப் போய் விட்டனர்! அவர்கள் சொல்லுகின்ற காரணம் இந்தக் கல்லூரி வாழ்க்கை ஏதோ ஜெயிலில் இருப்பது போல இருக்கிறதாம்! சுதந்திரமாக போக முடியவில்லை, வர முடியவில்லை! நேரத்தோடு வர வேண்டும் போக வேண்டும் என்பதெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது! பேசாமல் நாங்கள் போய் "பிரைவட்" டில் படித்துக் கொள்ளுகிறோம்!"
இங்கு நாம் யாரைக் குறை சொல்லுவது? இந்த மாணவர்கள் பெற்றோர்களின் பணத்தை வீணடிக்க தயாராய் இருக்கிறார்கள்! அரசாங்கம் கொடுக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தாமல் தனியார் கல்லுரிகளுக்குப் போகத் தயாராக இருக்கிறார்கள்! தனியார் கல்லுரிகளுக்குப் போனால் அவர்களுடைய பள்ளிக்கூட்டம் அப்படியே சேர்ந்து கொள்ளும்! கல்வித் தரமானதா என்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. கூட்டாளிகளோடு சேர்ந்து கும்மாளம் போடலாம்! தரமற்ற கல்வியைக் கொடுத்து கடைசியில் அந்த மாணவர்களைக் கடன்காரர்களாக ஆக்குவது தான் தனியார் கல்லூரிகள்! அதனைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள்!
நமது மாணவர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பொறுப்பு என்பது பெற்றோர்களிடமிருந்து வர வேண்டும். அந்தக் கல்லுரியிலிருந்து 12 மாணவர்கள் வெளியாகி விட்டார்கள் என்றால் அது சமுதாயத்திற்கு நட்டம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இவர்களால் படிக்க முடியவில்லை என்றால் வேறு மாணவர்களுக்கு அந்த இடங்கள் கொடுக்கப் பட்டிருக்கலாம். 12 மாணவர்கள் என்பது சாதாரணமாக விஷயம் இல்லை.
இடம் கிடைக்கவில்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம். கிடைத்தும் அதனைப் பயன்படுத்த மறுக்கிறார்களே என்கிற விசும்பல் இன்னொரு பக்கம்.
இதனை சரி செய்ய வேண்டும். மனிதவள அமைச்சு இன்னும் நமது அரசு சாரா இயக்கங்கள் மும்மரம் காட்ட வேண்டும்.
நல்லதே நடக்கும் என எதிர்ப்பார்ப்போம்!
No comments:
Post a Comment