Sunday 10 February 2019

இது தான் தமிழன்....!

பிரதமர் துறை துணை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி  மீது அம்புகள் எல்லாம் பாய ஆரம்பித்துவிட்டன!

அவரோடு சேர்ந்து போராடியவர்கள் மீதெல்லாம் வேதமூர்த்தி வழக்குப் போட்டு இழுத்தடிக்கிறார் என்பதாக குற்றச்சாட்டுக்கள் எழ ஆரம்பித்துவிட்டன! 

இங்கு யார் நியாயத்தின் பக்கம் நிற்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் பேசப் போவதில்லை. ஒரே காரணம் நான் அவர்களோடு சேர்ந்து போராடவில்லை. அந்தப் போராளிகளெல்லாம் யார் என்று கூட சரியாகத் தெரியாத நிலையில் யார் சரி யார் தவறு என்றெல்லாம் பேச முடியாது. பத்திரிக்கை வழியாக ஒரு சில போராளிகளின் பெயர்கள் தெரியுமே தவிர மற்றபடி அவர்களின் வாழ்க்கை வரலாறு எல்லாம் தெரிய வாய்ப்பில்லை.

நாம் இங்கு பொதுப்படையாகவே பேசுவோம். நமக்குத் தெரிந்தவரை  ஆரம்பத்திலிருந்து இப்போது வரை ஹின்ராஃ  இயக்கத்தில் அதிகமாக அடிப்பட்ட பெயரென்றால் அது வேதமூர்த்தியும் உதயகுமாரும்  தான். ஆனால் இடையே உதயகுமார் காணாமல் போனார். வேதமூர்த்தி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார், பதிமூன்றாவது பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜிப்பிடம் இந்தியர்களின் பிரச்சனையை அவரிடம் கொண்டு சென்றார்.  ஒரு சில காலம் அமைச்சராகவும் இருந்தார். அந்தப் பதவியின் மூலம் அவரால் எதனையும் செய்யமுடியவில்லை. அங்கு ம.இ.கா.வின் குறுக்கீடு இருந்தது. அதனால் பதவியை ராஜினாமா செய்தார். 

பதினான்காவது பொதுத் தேர்தலில் மீண்டும் பிரதமர் மகாதிரிடம் இந்தியர்களின் நிறைவேறாத் திட்டங்களைக் கொண்டு சென்றார். மீண்டும் மகாதிரின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகிக்கிறார். இது தான் சுறுக்கம்.

ஒன்று சொல்ல வேண்டும்.  வேதமூர்த்தியிடம் தொடர் முயற்சி இருந்தது. இந்தியர்களின் பிரச்சனை அரசாங்கத்திற்கு எட்ட வேண்டும் என்று தொடர்ந்தாற் போல முயற்சிகள் செய்திருக்கிறார். அதை நாம் பாராட்ட வேண்டும்.

சரி! இந்தப் பதவியின் மூலம் வேதமூர்த்தி அப்படி என்ன சாதித்திருக்கிறார்?  அப்படி எதுவும் தெரியவில்லை.  ஏதோ போகிறார் வருகிறார் என்பது போலத் தான் தெரிகிறதே தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.  ஆனால் மகாதிரின் அமச்சரவையே அப்படித்தானே நகர்ந்து கொண்டிருக்கிறது! அவரைக் குறை சொல்லுவதில் என்ன பயன்! மற்ற இந்திய அமைச்சர்களும் அப்படித்தானே இருக்கிறார்கள்!  அது நடைமுறைச் சிக்கலே தவிர அமைச்சர்களைக் குறை சொல்லுவதில் பயன் இல்லை. புதிய அரசாங்கம், பழைய அதிகாரிகள் ஒத்துழையாமை என்னும் போது இது சரிபண்ண சில காலம் ஆகும். அது வரை பொறுமை காக்க!

வேதமூர்த்தி இந்தியர்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான முயற்சிகள் எடுக்கிறார். முடிந்தவரை செய்கிறார். அதற்குள்ளாகவே அவரைப் பற்றியான குறைகள், குற்றங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரால் எப்படி தனது வேலைகளைச் செய்ய முடியும்? அதுவும் அவரோடு இருந்து, சேர்ந்து தோளோடு தோள் கொடுத்தவர்கள் இப்போது காலோடு கால் சேர்ந்து எட்டி உதைத்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? வெளியில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அவரைப் பதவி விலகச் சொல்லுவது தான் அவர்கள் நோக்கமா? 

இது சரியான அணுகுமுறை அல்ல. அவர் எந்தக் கட்சியையும் பிரதிநிதிக்கவில்லை. அதனால் அவரைப் பந்தாடலாம் என்று நினைப்பது தவறு. பிரதமர் அவரைத் தேர்ந்தெடுத்து ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். அவர் வேலையை அவர் செய்யட்டும். குறைந்தபட்சம் இந்த ஐந்து ஆண்டு காலத்தை அவர் நிறைவு செய்யட்டும். அது வரை பொறுமை காப்பது நமது கடமை. 

அதற்கிடையிலே நாம் புகுந்தால் அந்த நண்டு கதை தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது! அது  தமிழன் நண்டு என்று சொல்லுகிறோம் ஆனால் அதன் பின்னால் வேறு நண்டுகள் தூண்டி விடுகிறதோ!

No comments:

Post a Comment