நீண்ட நாள்களாக தனது குழந்தை பிரசன்னா டிக்ஷாவை காணாமல் தவிக்கும் தாய் இந்திரா காந்திக்குக் கொஞ்சம் நம்பிக்கை தரும் செய்தியாக அமைந்திருக்கிறது "இங்காட் நடவடிக்கை குழு".
உடனடியாக பல்வேறு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது அந்தக் குழு. இப்போது இந்திரா காந்தியின் மதம் மாறிய முன்னாள் கணவர் பத்மநாதன் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய வேண்டும். அவர் மலேசியாவில் இல்லை என சொல்லப்பாடுகிறது. தென் தாய்லாந்தில் இருப்பதாக ஒரு சில தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் டிக்ஷா தனது தந்தையுடன் தான் இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
முக்கியமாக அந்தக் குழுவினர் டிக்ஷா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதையே முக்கியமாக கருதுகின்றனர். நாமும் அதனையே தான் விரும்புகின்றோம். ஓடிப்போன கணவனைப் பற்றி நமக்கும் அக்கறை இல்லை!
பதினோரு மாத கைக்குழந்தையுடன் ஓடிபோன முகமது ரிட்சுவான் என்கிற பத்மநாதன்அந்தக் குழந்தை டிக்ஷாவை என்ன நிலையில் வைத்திருக்கிறார், அவருடனேயே வைத்திருக்கிறாரா அல்லது வேறு யாரிடமோ வளர்க்கும் பொருட்டு ஒப்படைத்திருக்கிறாரா என்கிற விபரமும் தெரியவில்லை!
இப்போது அந்தக் குழந்தைக்கு பதினோறு வயதாகிறது. பதினோறு வயது என்னும் போது அவள் பள்ளி செல்ல வேண்டும்.ஆனால் அவள் பள்ளிக்குச் செல்வதாக எந்த ஓர் அடையாளமும் இல்லை. அவள் பெயர் எந்த ஒரு பள்ளிக்கூடத்திலும் பதிவு செய்யப்படவில்லை என கல்வி அமைச்சு கூறுகிறது! குழந்தை டிக்ஷாவின் மைகிட் எனப்படும் அவளது அடையாள அட்டை தாயார் இந்திரா காந்தியிடமே உள்ளது. அடையாள அட்டை இல்லாமல் எப்படி பள்ளி செல்ல முடியும் என்று பாரிசான் ஆட்சியில் நம்மால் கேள்வி கேட்க முடியவில்லை! இப்போது கேட்டு புண்ணியமில்லை! அப்போதே வேறு பெயரில் பதிவு செய்திருக்கலாம்! அல்லது ஆட்சி மாறிய பின்னர் செய்திருக்கலாம்!
இங்காட் குழுவின் தலைவர் அருண் துரைசாமி ஓர் அறிவிப்பையும் செய்திருக்கிறார். குழந்தை டிக்ஷாவையோ அல்லது அவரது தந்தை முகமது ரிட்சுவானையோ கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரி.ம. 10,000.00 வெள்ளி வெகுமதி கொடுக்கப்படும் என அறிவிப்பு செய்திருக்கிறார்.
ஒரு சாதாரண, நாட்டின் குடிமகனை 'எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை!' என்று சொல்லும் காவல்துறையின் இயலாமையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை என்பதை நாமும் நம்ப வேண்டித்தானே இருக்கிறது!
இந்த முறை காவல்துறையோடு சேர்ந்து மக்களின் ஒத்துழைப்பையும் டிக்ஷாவின் தாய் எப்படி எதிர்ப்பார்க்கிறாரோ அதனையே நாமும் எதிர்ப்பார்க்கிறோம்.
நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்! நல்லது நடக்கும்!
No comments:
Post a Comment