Wednesday 30 October 2019

அரசியல்வாதிகளே காரணம்...!


போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர்,  அன்வார் இப்ராகிம்  மக்களவையில் ந்ல்லதொரு கருத்தைச் சொன்னார்.

நாட்டில் இன, சமய  பதற்றத்திற்கு அரசியலவாதிகளே காரணம் என்பதாக அவர் கூறிய குற்றச்சாட்டை மறுக்க யாராலும் இயலாது. மக்களவையில் அப்படி யாரும் மறுத்ததாகவும் தெரியவில்லை.

எப்போதுமே பொது மக்கள் சார்பில் நாம் ஒரு கருத்தை வலியுறுத்துகிறோம்.  நாட்டு மக்களிடையே எந்த இன சமய பதற்றம் என்பதாக ஒன்றுமில்லை. 

இன, சமய பதற்றம் என்பதெல்லாம் அரசியல்வாதிகள் செய்கின்ற சேட்டைகள் என்பது மக்களுக்கும் புரிகிறது.  

அரசியல்வாதிகளுக்குப் பதவி வேண்டும். அவர்களுக்குப் பெரிய கனவுகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியலில் உயர்ந்த, உயர்ந்த நிலைக்குப் போக வேண்டும். அவர்களைப் பார்த்து டத்தோ போட வேண்டும்; டத்தோஸ்ரீ போட வேண்டும்!  அப்போது தான் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியும்!  

வெறும் பதவி சுகம் போதுமா?  அத்தோடு பணம் வேண்டும்.  இலஞ்சம் என்பதே சமயத்திற்கு எதிரானது என்று சொல்லிக் கொண்டே இலஞ்சம் வாங்க வேண்டும். இவர்கள் உரையைக் காது கொடுத்து கேட்பவர்களுக்குச் சொர்க்கத்தைக் காட்டுவதும் இவர்கள் தங்களை நரகத்திற்குப் போக தயார் செய்வதும் - இது தான் அரசியல்வாதிகளின் திருவிளையாடல்!

பொது மக்களோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள்.  விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத அரசாங்கம். பிள்ளைகளுக்குப் பால் வாங்க முடிவதில்லை.  ஏகப்பட்ட விலையேற்றம். வீட்டு வாடகை, மாதாந்திர தவணைகள் என்று ஏகப்பட்ட பொருளாதார சிக்கல்கள்.  இந்த நிலையில் அவர்களுக்கு என்ன இனப்பதற்றம் அல்லது சமாயப் பதற்றம்?

பிழைப்பை நடத்தவே வழியில்லாத நிலையில் அவர்கள் சொல்லுவதெல்லாம் "நாய்ப் பயல்களே! எப்படியோ அடித்துக் கொள்ளுங்கள்! எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்!"  என்பது மட்டும் தான்! 

அன்வார் அவர்களே! நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி தான். ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் இந்த அரசியல்வாதிகளுக்குச் சரியான வாய்ப்பூட்டுப் போட ஆள் இல்லையே என்பதில் எங்களுக்கும் வருத்தம் தான்.

இனம், சமயம் மட்டும் அல்ல நாட்டில் நிலவுகிற அனைத்துப் பிரச்சனைகளுக்கும்  அரசியல்வாதிகள் தான் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!

அரசியல்வாதிகள் தான் காரணம் என்பதை முழு மனத்தோடு ஏற்றுக் கொண்டதாற்காக நன்றி! நன்றி

No comments:

Post a Comment