விடுதலைப் =புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி இதுவரை ஏழு பேர்களைகக் காவல்துறை கைது செய்திருக்கிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் என்றோ ஒழித்துக்கட்டப்பட்ட ஓர் இயக்கம். அதை மீண்டும் உயிருள்ள இயக்கமாக நமது காவல்துறை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது!
என்ன தான் காவல்துறை தங்களுக்கு ஏற்றவாறு காரணிகளை வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் பொது மக்களின் பார்வையில் சொல்லப்படுகின்ற காரணிகள் வேறு!
இவர்கள் கைதுக்கும் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவே ஐயப்படுகின்றனர்.
இந்தியத் தலைவர்கள், பொதுவாக இந்தியர்கள், ஜாகிர் நாயக்கிற்கு எதிராகவே குரல் கொடுக்கின்றனர் என்பதை நாடே அறியும். காரணம் ஜாகிர், அளவுக்கு அதிகமாகவே இந்தியர்களையும், இந்து மதத்தையும் தாக்கிப் பேசி வருபவர். அதனாலேயே இந்தியர்கள் அவரை எதிர்க்கின்றனர்.
இந்த எதிர்ப்புத் தான், எங்கோ ஆராம்பித்து எங்கோ போய் முடிகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஜாகிர் நாயக்கிற்கு எதிராக குரல் கொடுத்ததினால், ஓங்கிக் குரல் கொடுத்த தமிழ் தலைவர்களை. விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்று முத்திரைக்குத்தி அவர்கள் கைது செய்யபட்டிருக்கின்றனரோ என்று சந்தேகத்தை எழுப்புகிறது. இதற்கும் அதற்கும் முடிச்சுப் போட வைக்கிறது.
ஈழத்தமிழர்களுக்காக உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இரண்டு இலட்சத்திற்கு மேல் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அது ஓர் இனப்படுகொலை. அந்த அரசாங்கமே விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக கூறிவிட்ட பின்னர் அப்புறம் என்ன புதிதாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்?
இது இங்குள்ள தமிழர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்லி தமிழர்களைத் தலைக்குனிவு ஏற்படுத்தும் முயற்சி என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. அப்படியென்றால் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகளா? அப்படி ஓர் தோற்றத்தை ஏற்படுத்த ஏன் இவர்கள் முயற்சிக்கிறார்கள்?
நாங்கள் ரோஹிங்ய மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். பாலஸ்தீனிய மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். இப்படி உலகம் எங்கிலும் உள்ள ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம். குரல் கொடுப்பவர்கள் என்ன பயங்கரவாதிகளா?
ஓர் தனிப்பட்ட ஜாகிர் நாயக்கிற்காக ஓர் இனத்தையே பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்தி அவர்களை சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்வது .....ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
சட்டத்தைப் பின்பற்றலாம்; ஆனால் சொஸ்மா சட்டத்தை அல்ல.
No comments:
Post a Comment