Sunday 13 October 2019

மீண்டும் ஆரம்பித்துவிட்டாரா?

என்ன தான் சொன்னாலும் இந்தியர்கள் என்னவோ பிரதமர் மகாதிரை தான் குற்றம் சொல்லுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை!

முன்பு  டத்தோ சாமிவேலுவை  வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடியவர் இப்போதும் அதையே தான் செய்கிறார் என்று சொல்லுவதில் ஏதேனும் காரணிகள் இருக்கலாம்.

அப்போதும் இந்தியர்களை ஏமாற்றும் வேலைகள் நடந்தன. இப்போதும் அதே தான் நடந்து கொண்டிருக்கின்றன!

இப்போது விடுதலைப்புலிகளின் ஆட்டம் என்பதும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதும் இந்தியர்களை அடக்கி வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறோன்றுமில்லை என்பதாகத்தான் நினைக்க வேண்டியுள்ளது. 

இல்லாத ஒன்றுக்காக 'பாவ்லா' காட்டுவது ஒரு மிரட்டல், உருட்டல் நாடகம் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  இது இந்தியர்களை வாய் திறக்காமல் இருப்பதற்காகவே நடக்கின்ற நாடகம் என்று தான் சராசாரி மனிதன் நம்புகிறான்!

கடந்த கால பிரதமர் மகாதிர் ஆட்சியிலும் இந்தியர்கள் ஏமாந்தது தான் மிச்சம். இப்போதும் அதுவே நடக்கிறது. இந்தியர்கள்  பேச முடியாத வாய் திறக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது! யாரும் வாய் திறக்க முடியாத ஒரு சூழல். ஆமாம் தலைவர்களாலும்  வாய் திறக்க முடியவில்லை சாதாரண மனிதர்களாலும் வாய் திறக்க முடியவில்லை. அட,  இந்தியர்கள் நலனுக்காக என்று கூறப்பட்ட  அமைச்சர் கூட எதனையும் பேச முடியாத ஒரு சூழல் உருவாகிவிட்டது! மற்ற அமைச்சர்களுக்கும் அதே நிலை தான்!

இந்தியர்களுக்கு நல்லது நடக்கும் என்று தான் கடந்த தேர்தலில்  பக்காத்தான் அரசாங்கத்திற்கு இந்தியர்கள் ஆதரவு கொடுத்தார்கள்.   ஆனால் இந்தியர்கள் நம்பியது அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவார் என்கிற நம்பிக்கை தான்.  ஆனால் அது நடக்கவில்லை. இன்னும் அது நடக்கவில்லை என்பது தான் வருத்ததிற்குரியது! அதுவே இந்தியர்களுக்கு இன்றளவும் சரியான அடியாக விழுந்து கொண்டிருக்கிறது!

"எனக்கும் அந்த கைதுக்கும் சம்பந்தமில்லை!" என்று பிரதமர் சொல்லும் போதே தமிழர்களின் எண்ணம் ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.  தமிழர்கள் அவரைத் தான் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதும் அவருக்குப் புரிகிறது.

இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அல்ல மற்ற விஷயங்களிலும் தனக்குச் சம்பந்தமில்லை என்பதாகத்தான் அவர் பட்டும் படாமலும் பேசி வருகிறார்.  குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிக் கொண்டிருக்கிறார்! இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குக் கை வந்த கலை!

இப்போது நமக்குத் தெரிந்தது எல்லாம், வெளிப்படையாகவே, தனது பாணி அம்னோ அரசியலை  பிரதமர் மகாதிர் ஆரம்பித்துவிட்டார். அவர் பதவியை விட்டுக் கொடுப்பார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை! அதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிட்டுத் தான் அவர் பதவியை விட்டு இறங்குவார் என்பதும் நமக்குத் தெரிகிறது!

வேறு வழியில்லை! பொறுமை தான் காக்க வேண்டும்! நல்லதே நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment